மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday 18 May 2014

தன் வரலாறு : நான் ஒரு பேனா

சிறுவர் முதல் முதியோர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். நான் நீள் உருளை வடிவில் மெலிந்த உடலுடன் காட்சியளிப்பேன். என்னுள் உதிரம் ஊற்றப்பட்டிருக்கும். நான் தான் ஒரு பேனா.

என்னைப் பொதுவாகப் பேனா என்று குறிப்பிட்டாலும் என்னுடைய சிறப்பு பெயர் ‘பார்க்கார்’. ‘பார்க்கர்’ வம்சத்தில் பிறந்ததால் என்னையும் அப்படியே அழைத்தனர். என் உடலை இரும்பால் உருவாக்கினர். என் நுனிப்பகுதி எழுதுவதற்கு ஏதுவாகக் கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். என் உடலின் மேல் பகுதியில் விசை பொருத்தப்பட்டிருக்கும் வேளையில் என்னுள் கருப்பு நிற மை ஊற்றப்பட்டிருக்கும்.

நான் பேரும் புகழும் பெற்ற வரலாற்று மாநிலமான மலாக்காவில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையைப் பூர்வீகமாகக் கொண்டவன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் முழு உருவம் பெற்றதும் நெகிழிப் பையால் போர்த்தி  பின்னர் ஒரு பெட்டிக்குள் அடுக்கப்பட்டோம். தரமான முறையில் தயாரிக்கப்பட்ட நானும் என் உடன் பிறப்புகளில் சிலரும் அங்கிருந்து ஒரு வானூர்த்தியின் மூலம் பினாங்கு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டோம்.

Friday 16 May 2014

துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காது

3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது பட்டம் விடுவதில் பைத்தியக்காரத்தனமான வெறி உருவாகியிருந்தது. எல்லாம் நண்பர்களும் எப்பொழுதும் ஒரு பட்டத்துடனே இருந்தார்கள். மாலையில் எல்லோரும் பட்டத்தை எடுத்துக் கொண்டு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அது பறந்ததா என்பதைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. கையில் ஒரு பட்டம் வைத்திருப்பதையே பெருமையாகக் கருதினார்கள். எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டுத் தனக்கும் தெரியும் எனக் காட்டிக்கொள்வதற்காகவே ஆப்பே கடையில் விற்கும் சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் படங்களுள்ள பட்டங்களை வாங்கிக் கொண்டு திரிவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டம் விடும் விளையாட்டின் மீது ஆசை கூடியிருந்த காலத்தில் பள்ளிக்கே மாணவர்கள் புத்தகைப்பையில் பட்டத்தை ஒளித்துக் கொண்டு வரத் துவங்கினார்கள். ஓய்வு நேரத்தில் திடலில் அதுதான் எங்களுக்கு விளையாட்டு. அந்தப் பட்டம் பறக்காது. எங்களின் தலைக்கு மேலாகத்தான் பறக்கும். அதனை ஒருவன் பிடித்துக் கொண்டு ஓடுவான். நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம். அதுதான் பட்டம் விளையாட்டு.

துரைசாமி வாத்தியார் நடக்கும்போது கொஞ்சம் நொண்டுவார். அவர் மட்டுமே அப்பொழுது பள்ளியில் மாணவர்களுடன் இயல்பாகப் பேசிப் பழகக்கூடியவராக இருந்தார். நான் வாங்கிப் பெருமையாகக் கையில் வைத்திருந்த பட்டத்தைப் பார்த்துவிட்டு “என்னங்கடா பட்டம் விடுறீங்க.” என ஏசிவிட்டார். எனக்குப் பயங்கரக் கோபம். துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காது என எல்லோரும் பேசிக்கொண்டனர். உடனே சூப்பர்மேன் பேட்மேன் எல்லாம் மறையத் துவங்கினர்.