மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Thursday 19 February 2015

சிறுகதை: கரடிப் பொம்மை (வழிகாட்டிக் கட்டுரை)


திடீரென உறக்கத்திலிருந்த விழித்த சிவா தனது பென்சில் பெட்டியைத்தான் முதலில் பார்த்தான். அதிலிருந்த 3 வெள்ளி பத்திரமாக இருந்தது. யாருமற்ற வகுப்பறை வெறிச்சோடிப் போயிருந்தது. சிவா பசியில் அப்படியே மேசையின் மீதே உறங்கிவிட்டிருந்தான். அவனுக்கு வேண்டியது 5 வெள்ளி. சோகத்தில் தலைக் கவிழ்ந்தான்.

டேய்ய்ய் சிவா! உன்னெ சாப்டெ கூப்டேன் யேன் நீ இப்படி அடம் பிடிக்கற?” என வகுப்பிற்குள் நுழைந்த வாசு கொஞ்சம் அதட்டலாகவே கேட்டான்.

ஒன்னும் இல்லடா.. பசிக்கலஎன சிவா மீதி சொற்களை உள்ளுக்குள்ளே விழுங்கினான்.

நீ கதை உடாதே..உனக்கு பசின்னு தெரியும்..காசு இல்லையா? என் காசு தரட்டா?” எனப் பாக்கெட்டிற்குள் கையை விட்டான் வாசு.

இல்லடா..பரவாலெஎன மீண்டும் சிவா மேசையின் மீது தலையைப் பதித்தான்.

அவன் நினைவுகள் எட்டிப் பாய்ந்தன. மூன்று நாட்களுக்கு முன் சிவாவின் 3 வயது தங்கை மாலினி ஆச்சிக் கடையில் தொங்கிக் கொண்டிருந்த கரடி பொம்மையைப் பார்த்துவிட்டு அது வேண்டும் என அடம் பிடித்தாள். சிவாவின் அம்மா மாலினியைப் பிடித்து இடுப்பில் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இருந்தும் மாலினி இரவு முழுக்க அழுது அடம் பிடித்தாள்.

சிவாவிற்குத் தன் தங்கை என்றால் பிரியம். அவளுக்கு விளையாட்டுக் காட்டி மகிழ்ச்சிப்படுத்துவது அவனுக்குப் பிடித்தமான விசயம். அவள் அழுது அழுது கண்கள் வீங்கி அப்படியே தூங்கியதைச் சிவா வேதனையுடன் கவனித்தான். அவனுக்குக் கொடுக்கும் சாப்பாடு பணம் ஒரு வெள்ளியை அன்றாடம் சேமித்தான். மூன்று நாள் அவன் சரியாகச் சாப்பிடவும் இல்லை. இப்பொழுது கைவசம் 3 வெள்ளி.

டேய்ய் சிவா..என்னடா?” என வாசு மேசையைத் தட்டியதும் அவன் நினைவுகள் திரும்பின.

சிவா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு தன் பாக்கெட்டிற்குள் இருந்த ஒரு வெள்ளித் தாளை வெளியே எடுத்தான். வெளியே எட்டிப் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு முகத்தை மூடியிருந்தது ஒரு வெள்ளி தாள். இத்துடன் நான்கு ரிங்கிட். இருப்பினும் கரடிப் பொம்மைக்கு இன்னும் ஒரு வெள்ளி வேண்டும்.

பள்ளி மணிட்ரிங்ங்ங்ங்என அலறியது. சிவா நடக்கவே சிரமப்பட்டான். அவன் நடை தடுமாறியது. இன்று வியாழக்கிழமை. இன்னும் ஒரு வெள்ளி சேமிக்க இரண்டு நாள் காத்திருக்க வேண்டும் என்ற வேதனை அவனின் தொண்டையை அடைத்தது. சட்டென கீழே விழப்பார்த்தான். வாசு அவன் தோளைப் பிடித்துக் கொண்டான்.

என்னடா நீ..சாப்டாமே இப்படிப் பண்றே? சொன்னா கேட்கவே மாட்றெஎனப் புலம்பிக் கொண்டே வந்தான் வாசு.

இவனிடம் எப்படிச் சொல்வது? கவலையில் பல நாள் சாப்பிடலையேஎன மனத்தில் விம்மினான் சிவா.

பேருந்தை விட்டு இறங்கியதும் சிவா நேராக ஆச்சிக் கடைக்கு நடந்தான். அவன் கையில் நான்கு வெள்ளி அப்படியே பதுங்கியிருந்தது. ஒரு வெள்ளி குறைந்தாலும் அந்தக் கஞ்சம் பிடித்த ஆச்சிப் பொம்மையைத் தரமாட்டாள். ஆச்சிக் கடையின் வாசலுக்கு வந்ததும் வெளியே கரடிப் பொம்மை காற்றில் ஆடியப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. சோகத்துடன் அந்தப் பொம்மையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென ஒரு சைக்கிள் வந்து நின்றது. போத்தக்காரத் தாத்தா சைக்கிளைவிட்டு இறங்கி சிவாவிடம் வந்தார்.

டேய் சிவா அன்னிக்கு அப்பாக்கூட வந்து போத்த பொறுக்கிப் போட்டியே...உனக்கு எதும் தரலெ, இந்த ஒரு வெள்ளி வச்சிக்கோஎன ஒரு வெள்ளித் தாளை நீட்டினார்.

சிவாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. விருட்டென அவர் கையிலிருந்து ஒரு வெள்ளித் தாளைப் பிடுங்கிக் கொண்டே கடைக்குள் நுழைந்தான். இப்பொழுது எங்கிருந்து வந்தது எனத் தெரியாத சக்தி அவன் உடலெல்லாம் பரவியது. உற்சாகம் நிரம்ப கரடிப் பொம்மையுடன் வீட்டை நோக்கி ஓடினான். வழி நெடுக அவன் தங்கை மாலினியின் சிரிப்பு சத்தமே அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

-   கே.பாலமுருகன்