தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது.
“தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.
எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிள்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும் அந்தச் சைக்கிள் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும்வரை அடங்காது. இரவில் அவன் படுத்துறங்கியதும் முகிலனின் அப்பா சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்துவிடுவார்.
இப்பொழுது சைக்கிள் பரிதாபகாமக் கிடந்தது. ஒரு கால் இல்லாமல் சைக்கிளைத் தம்பியால் ஓட்ட முடியாது. அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருந்தார். தம்பி அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதான்.
முகிலன் வீட்டுக்கு வெளியே யோசனையுடன் வந்து நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனுடைய நண்பனிடம் சங்கிளி அறுந்த ஒரு பழைய சைக்கிள் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போனாள் அவனுடைய அம்மா தூரத்திலேயே முகிலனைத் திட்டத் தொடங்கிவிடுவார்.
மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறி மாலனின் வீட்டுக்குச் சென்றான். காற்று அவன் உடலை உரசிச் சென்றது. நல்லவேளை மாலம் வெளியில்தான் இருந்தான்.
“டே.... இங்க வா” என முகிலன் மெதுவான குரலில் மாலனை அழைத்தான்.
மாலன் வேலிக்கு அருகில் வந்து முகிலனைப் பார்த்தான்.
“எனக்கு உன்னோட அந்தப் பழைய சைக்கிள் வேணும்டா... கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா?” எனக் கேட்டுவிட்டு அந்தச் சைக்கிளையே பார்த்து நின்றான்.
முகிலன் அவன் அம்மாவுக்குத் தெரியாமல் முன்கதவை மெல்ல திறந்து அந்தப் பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியே வந்தான். முகிலனும் முகமெல்லாம் மலர்ச்சி. சங்கிலி இல்லாத சைக்கிள் ஓடப்போவதில்லை. முகிலனை ஆச்சர்யமாகப் பார்த்தான் மாலன்.
“இதை எப்படிடா ஓட்ட போறே?” எனக் கேட்டுவிட்டு முன்கதவை அடைத்தான்.
முகிலன் பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அவனைவிட கொஞ்சம் உயரமான சைக்கிள் அது. வீட்டை நெருங்க நெருங்க தம்பியின் ஓயாத அழும் குரல் வேகமாகக் கேட்டது. முகிலனால் அதைக் கேட்கமுடியவில்லை. சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
“குமரா! வெளிய பாரு அண்ணன் பெரிய சைக்கிள் கொண்டு வந்துருக்கேன். வந்து பாருங்க.. அல்ட்ரமேன் சைக்கிள் இது” எனக் கண்களைப் பெரிதாக்கிக் காட்டினான் முகிலன்.
தம்பி அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தான். தம்பியைத் தூக்கி சைக்கிளின் இடைக் கம்பியில் உட்கார வைத்தான். பின்னர், முகிலன் சைக்கிளில் ஏறி கால்கள் இரண்டையும் தரையில் வைத்துச் சைக்கிளைத் தள்ளினான். தம்பியின் அழுகை நின்று இலேசாகச் சிரிக்கத் துவங்கினான். சங்கிலி இல்லாத அந்த அல்ட்ராமேன் சைக்கிள் முகிலனின் காலால் ஓடிக் கொண்டிருந்தது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
nice sir
ReplyDeleteViyappu. ...
ReplyDeleteMagilvhu. .
Sirappu. ...
Viyappu. ...
ReplyDeleteMagilvhu. ...
Sirappu. ....