3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது பட்டம் விடுவதில் பைத்தியக்காரத்தனமான
வெறி உருவாகியிருந்தது. எல்லாம் நண்பர்களும் எப்பொழுதும் ஒரு பட்டத்துடனே இருந்தார்கள்.
மாலையில் எல்லோரும் பட்டத்தை எடுத்துக் கொண்டு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அது
பறந்ததா என்பதைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. கையில் ஒரு பட்டம் வைத்திருப்பதையே
பெருமையாகக் கருதினார்கள். எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டுத் தனக்கும் தெரியும்
எனக் காட்டிக்கொள்வதற்காகவே ஆப்பே கடையில் விற்கும் சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் படங்களுள்ள
பட்டங்களை வாங்கிக் கொண்டு திரிவார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டம் விடும் விளையாட்டின் மீது ஆசை கூடியிருந்த
காலத்தில் பள்ளிக்கே மாணவர்கள் புத்தகைப்பையில் பட்டத்தை ஒளித்துக் கொண்டு வரத் துவங்கினார்கள்.
ஓய்வு நேரத்தில் திடலில் அதுதான் எங்களுக்கு விளையாட்டு. அந்தப் பட்டம் பறக்காது. எங்களின்
தலைக்கு மேலாகத்தான் பறக்கும். அதனை ஒருவன் பிடித்துக் கொண்டு ஓடுவான். நாங்களெல்லாம்
பின்னாடியே ஓடுவோம். அதுதான் பட்டம் விளையாட்டு.
துரைசாமி வாத்தியார் நடக்கும்போது கொஞ்சம் நொண்டுவார். அவர் மட்டுமே
அப்பொழுது பள்ளியில் மாணவர்களுடன் இயல்பாகப் பேசிப் பழகக்கூடியவராக இருந்தார். நான்
வாங்கிப் பெருமையாகக் கையில் வைத்திருந்த பட்டத்தைப் பார்த்துவிட்டு “என்னங்கடா பட்டம்
விடுறீங்க.” என ஏசிவிட்டார். எனக்குப் பயங்கரக் கோபம். துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம்
என்றால் பிடிக்காது என எல்லோரும் பேசிக்கொண்டனர். உடனே சூப்பர்மேன் பேட்மேன் எல்லாம்
மறையத் துவங்கினர்.
ஆனால், மறுநாள் துரைசாமி வாத்தியார்
வட்டமாக ஒரு பட்டத்தைச் செய்து பறவையின் இறக்கையைப் போல இரண்டு பக்கமும் ஒட்டிவிட்டு
அதில் நூலைக் கட்டி என் வகுப்பு நண்பன் ஒருவனிடம் கொடுத்து ஓடச்சொன்னார். அவன் அதை
எடுத்துக் கொண்டு சிறிது தூரம் போய் நின்றான். நூல் கண்டை என்னிடம் கொடுத்துவிட்டு
நூலை விட்டுக்கொண்டே வேகமாக ஓடச்சொன்னார். நானும் அப்படியே செய்தேன். கொஞ்ச நேரத்தில்
பட்டம் பள்ளியின் கூரையை எல்லாம் தாண்டி மேலே மேலே செல்லத் துவங்கியது. இப்படி ஒரு
பட்டம் விட வேண்டும் எனச் சொல்லிவிட்டு துரைசாமி வாத்தியார் நொண்டிக்கொண்டே போய்விட்டார்.
வானில் ஒரு புதிய வடிவத்துடன் அந்தப் பட்டம் பறந்து கொண்டிருக்கும்போது கற்பனைத்திறன்
புத்தாக்கத் திறன் என்பதைப் பற்றியெல்லாம் எங்களிடம் யாரும் அப்பொழுது சொன்னதில்லை.
துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காதுதான் அது வழக்கமானதாகவே இருந்தால்...
இப்பொழுது இல்லாத அந்தத் துரைசாமி வாத்தியர் நினைவுகளுடன் ஆசிரியர்
தினத்தை நினைத்துப் பார்க்கிறேன். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
-
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment