“உனக்கு எல்லா தெரியுமா? கொஞ்சம் அமைதியா இருக்கியா? உன்ன பேச வேண்டாம்னு எத்தனைமுறை சொல்லிருக்கேன்?”
அப்பா அப்படி அதட்டியதும் சுவாதி அமைதியானாள். சுவாதியின் அப்பா எப்பொழுதும் சுவாதியிடம் அப்படித்தான் கடிந்து கொள்வார். வீட்டிலும் சுவாதி துடுக்கானவள். பேசிக்கொண்டே இருப்பதால் அவளுடைய அப்பாவிற்கு அது பிடிக்காது. உடனே அவளை அதட்டி அறைக்குள் அனுப்பிவிடுவார். பள்ளியில் நடக்கும் எத்தனையோ கதைகளை அவள் அப்பாவிடம் சொல்ல விருப்பப்பட்டும் அப்பா அதற்கு அனுமதியளித்ததே இல்லை.
கேளிக்கை மையம் அன்று வண்ண விளக்குகளுடனும் பெரும் சத்தங்களுடனும் அவளுக்கு முன்னே அச்சுறுத்திக் கொண்டிருந்தன. அதுவரை துள்ளலுடன் இருந்தவள், அப்பாவின் ஒரே அதட்டல் அவளைச் சுருங்கச் செய்துவிட்டது.
“நான் சொன்னேந்தானே…ஏன் சும்மா வாயடிச்சிக்கிட்டே வந்த?”
“என்ன தப்பா சொன்னேன்? அது வந்து…”
“சரி சும்மா இரு. பேசிக்கிட்டே இருக்காதெ…”
சுவாதியின் குடும்பத்தில் மொத்தம் 12 பேர். பாட்டி, அப்பா, அம்மா, சுவாதி, சுவாதியின் இரண்டு அக்காள்கள், சுவாதியின் இரண்டு தம்பிகள், ஒரு தங்கை, பெரியப்பா மகன்கள் இரண்டு பேர் என அனைவரும் அந்தக் கேளிக்கை மையத்திற்கு வந்திருந்தனர்.
ஆட்களின் கூட்டம் அலைமோதின. கூட்டத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் காணாமல் போய்விடலாம். சுவாதி ஆர்வத்துடன் தான் காணாமல் போக வேண்டும் என ஒவ்வொரு கணமும் நினைத்தப்படியே வந்தாள். அன்று முழுவதும் தன்னைத் தேடி அலைந்து இவர்கள் எல்லாம் அழுதாவது தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்வார்கள் என அவள் நினைத்தாள்.
“எல்லா கூடவே நடங்க…ஏய்ய்ய் சுவாதி, அக்கா கைய பிடிச்சுக்கோ…உன்கிட்ட தனியா சொல்லணுமா?”
மீண்டும் அப்பாவின் அதட்டல் கொய்ய்ய்ய்ங்ங்ங் என சுவாதியின் காதிற்குள் நுழைந்து சத்தமிட்டது. அக்காவின் கையில் தளர்ந்திருந்த தன் பிடியை மேலும் இறுக்கமாக்கினாள். எல்லோரும் அவசரம் அவசரமாக நடந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு மகிழுந்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குப் போனார். இராட்டினத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த சுவாதியின் ஆசை அந்தரத்திலேயே சுழன்று கொண்டிருக்க சோகத்துடன் அக்காவின் கையைப் பிடிக்காமல் நடந்து கொண்டிருந்தாள். சடாரென ஒரு கறுத்த தடிப்பான கை ஒரு திசு காகிதத்துடன் அவள் வாயைப் பொத்தியது. அடுத்த கணமே சுவாதி மயங்கினாள்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுவாதி கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தாள். ஆனால், அவள் கண்கள் கட்டப்பட்டிருந்தன. ஏதோ ஒரு பழைய காரின் மெத்தையில் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு கிடத்தப்பட்டிருந்தாள். சுவாதிக்குக் குமட்டிக் கொண்டு வந்ததால், வாந்தியெடுக்க வேண்டும் எனக் கத்தினாள். வாயும் கட்டப்பட்டிருந்ததால் அவளால் கொடூரமான ஓசையையே எழுப்ப முடிந்தது.
அருகில் இருந்த முரட்டுக் கையுடைய ஒருவன் அவளின் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டான்.
“எனக்கு வாந்தி வருது…”என சுவாதி கத்தினாள்.
“கத்தாதே…கொஞ்சம் இரு”
உடனே கார் நிறுத்தப்பட்டது. சுவாதியின் கண் கட்டும் அவிழ்க்கப்பட்டன. காரிலிருந்து இறங்கி அடிவயிற்றிலிருந்து சிரமப்பட்டு வாந்தி எடுத்தாள். மயக்கம் அவள் கண்களை மங்கச் செய்தது. செம்பனை மரங்கள் சூழ்ந்திருந்த ஒரு பெரிய சாலையின் ஓரத்தில் அவர்கள் நின்றிருந்தார்கள். இருள் அக்காட்டைச் சூழந்திருந்தன. சாலையில் வேறு கார்களே இல்லை. மீண்டும் அந்த நபர் சுவாதியின் வாய்க்கட்டைக் கட்டிவிட்டான்.
சட்டென அவர்கள் நின்றிருந்த இடத்தினோரமாக ஒரு சீனர் கூட்டம் இருந்த மூடுந்து வந்து நின்றது. அந்த மூடுந்திலிருந்து ஓர் ஆடவரும் அவருடைய மகனும் கீழே இறங்கி கைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர்.. விருட்டென சுவாதி கத்தி கொண்டே அவன் பிடியிலிருந்து விலகி அவர்களை நோக்கி ஓடினாள்.
அந்த முரட்டுத் தோற்றத்துடன் காருக்கு வெளியே நின்றிருந்த நபர் என்ன செய்வதென்று தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினான். சுவாதி அழமட்டுமே செய்தாள். அந்தச் சீனர்களிடம் வேறு எதையும் விளக்க முடியாமல் தடுமாறினாள். அவர்களும் அவளைக் கொண்டு போய் காவல் நிலையத்தில் சேர்த்தனர். 10 வயதே நிரம்பிய சுவாதி துவண்ட முகத்துடன் காவல் நிலையத்தில் காத்திருந்தாள். அங்கும் அவள் எதையுமே சொல்லவில்லை. எல்லோரையும் பார்த்துப் பயந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவளுடைய அப்பாவும் அம்மாவும் வந்து சேர்ந்தனர். சுவாதியின் அம்மா ஓடிப் போய் அவளைக் கட்டியணைத்துக் கொண்டார். சுவாதி அப்பாவிற்குக் கேட்காதபடிக்கு மெதுவாகக் குமுறினாள். இப்பொழுது அப்பா தன்னை அடித்து இழுத்துச் செல்லும் காட்சியை மனத்திற்குள் ஓடவிட்டாள் சுவாதி.
காவல் நிலையத்தில் புகார் தொடர்பான வேலைகளை முடித்துவிட்டு சுவாதியின் அப்பா சுவாதியின் முன் வந்து நின்றார். சுவாதியின் உடலில் நடுக்கம் கூடியது. சட்டென அவள் முன் அப்பா மண்டியிட்டு அமர்ந்தார்.
“சொல்லுமா… என்ன ஆச்சி? என்ன நடந்துச்சி? அப்பாகிட்ட சொல்லுமா” என சுவாதியின் அப்பா அவளுடைய தாடையைப் பிடித்துக் கேட்டார்.
அன்றுத்தான் சுவாதியின் ‘வாய்க்கட்டு’ அவிழ்க்கப்பட்டது.
-
ஆக்கம்: கே.பாலமுருகன்
Padittatil pidithathu
ReplyDelete