மாணவர்களுக்கு,
இவ்வாண்டு
நாளை முதல் வியாழன்வரை தேர்வெழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். மனம் தளறாமல் முயற்சியைக் கடைசிவரை மேற்கொள்ளவும். நீங்கள்
போட்ட உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி உங்களின் சொந்த
திறனையும் ஆசிரியர்கள் உங்களுக்காகக் காட்டிய வழிகாட்டுதல்களையும் மட்டும் மனத்தில் நிலைநிறுத்தி
கேள்விகளை நிதானமாகப் படித்து விடையளிக்கவும். நீங்கள் இத்தனை காலம் படித்தவை அனைத்தும்
உங்கள் நினைவிற்கு வர இயற்கையிடம் கேட்டுக் கொள்கிறேன். சுடர் நூல் மூலமும் எனது பயிற்சிப்பட்டறைகளின்
மூலம் மலேசியாவில் வாழும் பல்லாயிரணக்கான மாணவர்களுக்கு என்னால் இயன்றவரை வழிகாட்டியிருக்கிறேன்.
அவற்றை நலம்பட செய்ய ஒத்துழைத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்
மனமார்ந்த நன்றி. வெற்றி நிச்சயம்.
ஆசிரியர்களுக்கு,
ஆறாம்
ஆண்டு மாணவர்களுக்காக இதுநாள்வரை நீங்கள் செலுத்திய அக்கறைக்கும் உழைப்பிற்கும் நிச்சயம்
பலன் கிடைக்கும். ஆகவே, உற்சாகத்துடன் உங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி
வைக்கவும். கடைசி நேரத்தில் இயற்கை அவர்களுக்கு உதவும் என நம்புங்கள். யூ.பி.எஸ்.ஆர்
என்பது மாணவர்களுக்கான திறன் மதிப்பீடு மட்டுமே. ஆசிரியர்களையும் பள்ளியையும் மதிப்பீடு செய்யும் ஒரு கருவியாக
யூ.பி.எஸ்.ஆர் பார்க்கப்படுவதில் எனக்கு எப்பொழுதும் முரணான கருத்துண்டு. ஓர் ஆசிரியரின்
வேலை தரத்தை யூ.பி.எஸ்.ஆர் என்கிற ஒரு சோதனையை முன்வைத்து மதிப்பீடுவதோ அல்லது முடிவுக்கு
வருவதோ மிகவும் தவறான அணுகுமுறையாகும்.
சோதனை
என்பது மாணவர்கள் அக்கணம் இருக்கும் மனநிலையோடு எதிர்க்கொள்வதாகும். அவர்களின் மனநிலைக்கும்
கிரகிக்கும் திறனுக்கு ஏற்பவும் அவர்கள் சோதனையை மேற்கொள்கிறார்கள். அங்கு சில புரிதல்
தொடர்பான சிக்கல்கள் நடக்க வாய்ப்புண்டு. அதனை முன்வைத்து ஓர் ஆசிரியரின் உழைப்பை விமர்சிப்பதும்
தவறே. எத்தனையோ நல்லாசிரியர்கள் மெதுபயில் மாணவர்களைச் சிரமப்பட்டு தேர்ச்சியாக்கியிருக்கிறார்கள்.
ஆனால், சமூகம் அவர்களைக் கண்டுகொண்டதே இல்லை. அவர்களும் சமூக கவனத்திற்காகக் காத்திருக்காமல்
அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகின்றனர். நல்லாசிரியர் என்பது எத்தனை மாணவர்களை 'ஏ' பெற வைக்கிறார்கள் என்பதில் இல்லை என்பதை நம்புங்கள்.
தலைமை
ஆசிரியர்களுக்கு,
மரியாதைக்குரிய
தமிழ்ப்பள்ளிகளின் வேலிகளாக இருந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள்.
யூ.பி.எஸ்.ஆர் ஒன்றை மட்டுமே முன்வைத்து பள்ளியின் மீது திணிக்கப்படும் மதிப்பீட்டு
பார்வைக்கு சற்றும் செவிசாய்க்க வேண்டாம். ஆண்டு முழுவதும் உழைப்பையும் கவனத்தையும்
போட்டு நீங்கள் உருவாக்கிய மாணவர்களின் வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்த்து
அதனை ஏற்றுக்கொண்டு பக்குவத்துடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிடவும். சக தலைமை
ஆசிரியர்கள் உங்களோடு அவர்களின் அடைவை ஒப்பிட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமையக்கூடும்.
அதனைச் சற்றும் பொருட்படுத்தாதீர்கள்.
ஒவ்வொரு பள்ளியும் தனித்துவமானவை. பல வகைகளில்
வேறுபட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் ஒன்று கிடையாது. ஒவ்வொரு மாணவனுக்கும் பின்னணியில்
அவனது குடும்பம், அவன் வாழும் சமூகம் என எத்தனையோ விசயங்கள் அடங்கியிருக்கின்றன. ஆகவே,
நாம் வாழும் சூழலுக்கும் நாம் பணியாற்றும் சமூகத்திற்கும் ஏற்ப நாம் போடும் முயற்சிகளின்
பலன்களும் அடைவும் பிரதிபலிக்கின்றதை எங்கோ நம்முடன் சம்பந்தப்படாமல் இருப்பவர்களால்
புரிந்து கொள்ள முடியாது.
உங்களின்
தலைமைத்துவம் எப்பொழுதுமே சளைத்தவை அல்ல. நம்பிக்கையுடன் அடுத்த அடியை எடுத்து வைப்போம்.
உங்களோடு தமிழ்ப்பள்ளியின் முன்னேற்றத்திற்குக் கைக்கோர்த்து உழைக்க ஆசிரியர்கள் தயாராக
இருக்கிறார்கள். ஆகவே, யூ.பி.எஸ்.ஆர் என்பதைப் பந்தயம் என நினைக்காமல் உங்கள் ஆசிரியர்களின்
உழைப்பை இதன்வழி மதிப்பீடு செய்யாமல் மாணவர்களைத் திறன்மிக்கவர்களாகவும் படைப்பாற்றமிக்கவர்களாகவும்
எதிர்கால சவால்களைச் சந்திக்கும் ஆற்றமிக்கவர்களாகவும் உருவாக்க மாற்றுவழிகளை ஒன்றிணைந்து
யோசிப்போம். ( உங்கள் அனுபவம் என் வயதாக இருப்பினும் தமிழால் நின்று கருத்துரைக்கும்
யாவரும் சமமே என்கிற நம்பிக்கையில்)
பெற்றோர்களுக்கு,
ஒவ்வொரு கணமும் பிள்ளைகள் வாழ்வில் வெற்றிப்பெற வேண்டும் என அரும்பாடுபட்டு உழைக்கும் பெற்றோர்களுக்கு வணக்கம். யூ.பி.எஸ்.ஆர் சோதனை எஸ்.பி.எம் சோதனைக்கு நிகராகப் பார்ப்பதைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். அத்தனை கணமான சுமையை உங்கள் 12 வயதே ஆன பிள்ளைகளின் மீது திணிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதனை அவர்களால் சுமக்கவும் முடியாது.
உங்கள் சொந்த கௌரவத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அவர்களின் மீது செலுத்தி அவர்களைப் பந்தைய குதிரைகளாக மாற்றும் வழக்கத்தை இச்சமூகமும் பெற்றோர்களும் கைவிட வேண்டும். அவர்களின் திறனுக்கும் அறிவுக்கும் ஏற்ப அச்சமயம் கொடுக்கப்படும் சோதனையை எதிர்க்கொள்ளப் போகிறார்கள். அதில் சில ஏற்றமும் இறக்கமும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளவும். உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒன்றில் நிச்சயம் கெட்டிக்காரர்களாக இருக்கக்கூடும். சிலர் ஓவியத்தில், சிலர் விளையாட்டில், சிலர் நடிப்பில், சிலர் வர்ணம் தீட்டுவதில். அதனை முதலில் கண்டறிந்து அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் நினைப்பதைப் போல அவர்கள் அனைத்திலும் கெட்டிக்காரர்களாக உருவாகி வருவார்கள்.
நல்வாழ்த்துக்
கூறி அடுத்த கட்டத்தில் மீண்டும் ஒன்றிணைவோம் என்கிற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன்.
- திறமிகு
ஆசிரியர் கே.பாலமுருகன்.
நன்றி.அருமையான கருத்துக்கள்.
ReplyDelete