1.வணக்கம். சுடர் என்கிற பெயரில் நீங்கள் வெளியிடவிருக்கும்
மாணவர் இலவசப் பயிற்சி நூலின் உள்ளடக்கம் யாவை?
கே.பாலமுருகன்: இந்தச் சுடர் இலவசப் பயிற்சி நூல் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காகப் பிரத்தியேகமான முறையில் தமிழ்மொழித் திறமிகு ஆசிரியர்களின் உதவியுடன் தயாராகின்றது. சிறுகதை, உரை, அறிக்கை, கடிதம், வாக்கியம் அமைத்தல், தன்கதை போன்ற தமிழ்மொழி தாள் இரண்டிற்கான அனைத்துப் பகுதிகளையும் இந்தச் சுடர் நூலில் மாணவர்கள் வழிகாட்டியாகவும் பயிற்சியாகவும் மேற்கொள்ளலாம்.
2. தற்போதைய நிலையில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் (தேர்வு அடிப்படையில் ) என்ன என்று நினைக்கிறீர்கள்?
கே.பாலமுருகன்: கல்வி அமைச்சின் உயர்நிலை சிந்தனை கொள்கைக்குட்பட்டு கல்வி அமைப்பு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு ஏற்ப மாறி வருகின்றது. அந்த மாற்றத்தைக் கலைத்திட்டம், தேர்வு மதிப்பீட்டு முறை, கற்றல் கற்பித்தலின் வழியே சாத்தியப்படுத்த முடியும். ஆகையால், மாணவர்கள் சிந்திக்கும் முறையில் அபாரமான மாற்றம் உருவாகுவதன் மூலம் அவர்களின் படைப்புகளிலும் அந்தத் தாக்கத்தை உருவாக்க முடியும். ஓர் ஆசிரியர் தன் வகுப்புறைக்குள் உலகத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் ஒரு வட்டத்திற்குள்ளேயே சிந்திக்க நேரிடும். கற்பனைத்திறனை மேலோங்கச் செய்வதே மாணவர்கள் எதிர்க்கொள்ளும் சிக்கலாகப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில் ஏற்கனவே சிந்திக்கப்பட்டதைப் போலவே தாங்களும் சித்தித்தால் போதும் என நினைக்கிறார்கள். அந்த எல்லையைத் தாண்ட வேண்டும். அதற்கு வகுப்பறையில் நடக்கும் கற்றல் கற்பித்தலில் சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
3. தற்போதைய கல்வி சூழலில் ஆசிரியர்கள் மெதுபயிலும் மாணவர்களுக்கென்ற பிரத்தியேக
பாட போதனையை மேற்கொள்ள முடிகிறதா?
கே.பாலமுருகன்: தனிப்பட்ட விருப்பம் முயற்சி சார்ந்து பயிற்றிகள் செய்து அவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர் உள்ளனர். கல்விச் சூழலிலும் ‘லீனுஸ்’ என்கிற திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், தமிழ்மொழிக்கு அப்படியொரு திட்டம் வரவில்லையென்றாலும் மாநிலங்கள் ரீதியாகச் சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நாங்கள்( கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிக்களுக்கான தமிழ்மொழிப் பாடக்குழு) கெடா மாநிலத்தில் கடந்த வருடம் மெதுப்பயில் மாணவர்களுக்கென ‘செந்தமிழ் பயிற்றி’ எனும் நூலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினோம். ஆனால், ஓர் ஆசிரியர் தனிப்பட்ட முறையில் மெதுப்பயில் மாணவர்களைக் கவனிப்பதென்பது இன்றைய வேலைப் பளுமிக்க சூழலில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கின்றது.
4. நீங்கள் உருவாக்கி உள்ள நூலின் சிறப்பு தன்மைகள் என்ன? உதாரணமாக அடுத்த ஆண்டு புதிய கல்வி திட்டத்தில் இந்நூலை தொடர்ந்து பயன்படுத்த
இயலுமா?
கே.பாலமுருகன்: நான் தேசிய ரீதியிலான கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதன்மைப் பயிற்றுனர் ஆகும். ஆகவே, அடுத்த வருடமும் நிச்சயம் இந்த நூலைப் பயன்படுத்த முடிந்த வகையிலேயே புதுப்பிக்கப்பட்ட அளவில் தயாரித்துள்ளேன். மெதுப்பயில் மாணவர்களையும் கவனத்தில் கொண்டதோடுமட்டுமல்லாமல் உயர்நிலை சிந்தனைப் பயிற்சிகளும் அடங்கியவாறு சுடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
5. இந்நூலை இலவசமாக கொடுக்க முன்வந்ததன்
பின்னனி என்ன?
கே.பாலமுருகன்: நான் அடிப்படையில் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியன். மலேசியாவின் தெற்கு மூலையில் இருக்கும் மெர்சிங் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்மொழிப் பட்டறை வழங்க சிரமம்பாராமல் சென்று வந்தேன். 2010ஆம் ஆண்டு தொடங்கியே சிறுவர்களுக்கான ஒரு சூழலில் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கச் செயல்படத் துவங்கிவிட்டேன். கடந்த நான்கு வருடங்களாக நாடெங்கிலும் தமிழ்மொழி/ சிறுகதை பட்டறைகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். என் முகநூல் ஆல்பங்களைப் பார்த்தால் தெரியும். ஆகவே, நான் இந்தத் துறையில் புதியவன் அல்ல. எந்தப் புறத்தாக்கங்களுமின்றி இது என் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நான் செய்ய முடிவெடுத்த ஒரு திட்டம். இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. அதனை மேற்கொள்வதற்கான காலத்தை நானே முடிவெடுப்பேன்.
6. இந்நூலைப் பள்ளிகளுக்கு எப்படி கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்? ஒரு பள்ளிக்கு எத்தனை நூல்கள் கிடைக்கும்?
கே.பாலமுருகன்: வசதிகள் குறைந்த உட்புற பள்ளிகளுக்கே முக்கியத்துவம் தர இருக்கிறோம். முகநூலில் மட்டும் இதுவரை 2000 பிரதிகள் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இனி தொடர்ந்து முடிந்தவரை அனைத்து பள்ளிகளுக்கு ஒரு பிரதி கிடைக்கவும் ஏற்பாடுகள் நடக்கும். அதனை அவர்கள் பிரதியெடுத்துப் பாவித்துக் கொள்ளலாம்.
7. இந்நூலை பயிற்சி நூலாகப் பயன்படுத்த முடியுமா? அதாவது இந்நூலில் மாதிரி கட்டுரைகளைத்
தவிர்த்து பயிற்சிகள் உள்ளனவா?
கே.பாலமுருகன்: ஒவ்வொரு பகுதியிலும் விளக்கங்களும் பயிற்சிகளும் இருக்கின்றன. கெட்டிக்கார மாணவர்களுக்கும் மெதுப்பயில் மாணவர்களுக்கும் சேர்த்தே பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு முன் அவர்களைத் தயார்ப்படுத்த ஓரளவிற்கு உதவி செய்யும்.
8. வர்த்தகர்களோ செல்வந்தர்களோ இந்நூலைப் பதிப்பித்து நாடுமுழுவதும் விநியோகிக்க
முன்வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கே.பாலமுருகன்: 2000 பிரதிகள் என்பது என்னுடைய திட்டம். அதற்கும் மேல் அச்சிட்டு தமிழ்ப்பள்ளிகளுக்குத் தருவதென்றால் தாராளமாக வரவேற்பேன். ஆனால் இந்த இலவச நூலை விற்பனைக்கு அனுமதிக்க மாட்டேன்.
9. ஒரு மாணவன் தமிழ் மொழி பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம்?
கே.பாலமுருகன்: முதலில் நிறைய கட்டுரைகளையும் கதைகளையும் வாசிக்க வேண்டும். வாசிப்பை அவர்கள் விரும்புகிற ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்து, மாணவர்களுக்குள்ளே கலந்துரையாடி கருத்துரைக்கும் பழக்கத்தை அவர்கள் ஆசிரியரின் துணையின்றியும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது அவர்களை மேம்படுத்தும். மற்றவர்களின் படைப்புகளை விமர்சிக்கத் துவங்கும் ஒரு மாணவன் தன் படைப்பையும் மதிப்பிட்டுக் கொள்ள வாய்ப்பாக அமைகின்றது. நிறைய வாசிப்பதன் மூலம் இலக்கணப் பிழையின்றி ஒரு படைப்பை எழுத முடியும்.
10. நீங்கள் நாடு முழுவதும் பட்டறைகள் நடத்துவதாக அறிகிறோம். ஆகவே, அவ்வகையில்
பலத்தரப்பட்ட மாணவர்களை நீங்கள் சந்திப்பீர்கள். இன்றைய நிலையில்
மாணவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது? அவர்கள் தங்கள் முழு
ஆற்றலையும் வெளிப்படுத்தி பயில்கிறார்களா?
கே.பாலமுருகன்: தேர்வுக்காகத் தயார்ப்படுத்தும் நிலையில் அவர்கள் கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறார்கள். இருந்தபோதும் ஆசிரியர்களின் அயராத முயற்சிகள், பெற்றோர்களின்
கவனிப்பு என ஒரு பக்கம் மாணவர்களின் மேம்பாட்டுக்காகச் சிலர் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
நாடெங்கிலும் நடக்கும் வழிகாட்டிப் பட்டறைகள் ஆரோக்கியமானவையாகும்.
மாணவர்களுக்கென இதழ்கள், பயிற்சி நூல்கள் வருகின்றன.
அனைத்து சூழலுமே அவர்களுக்குத் துணையாக இருப்பதால் எதிர்க்காலத்தில்
நாம் எதிர்ப்பார்க்கும் மாணவர் சமூகம் உருவாகலாம். நான் சந்திக்கும்
பல மாணவர்கள் திறப்புக்காக்க் காத்திருக்கிறார்கள். கற்பனைத்திறனுடன்
இருக்கிறார்கள். இன்னும் ஒரு பத்து வருடங்களில் அவர்கள்தான் ஆளுமைகளாகப்
பல துறைகளில் வீற்றிருக்கப் போகிறார்கள்.
11. சுடர் இலவச நூலைப் பெற்றுக்கொள்வதென்றால் எப்படி?
கே.பாலமுருகன்: 0164806241 என்கிற எண்ணில் என்னைத் தொடர்புக்
கொள்ளலாம். அல்லது Bahasa Tamil Upsr என்கிற முகநூலில் தகவல் அனுப்பலாம்.
12. இந்த அரிய சேவைக்காக உங்களைப் பாராட்டுகிறோம்.
கே.பாலமுருகன்: இது சேவையெல்லாம் இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. இது என் கடமை என்றே நினைக்கிறேன்.
என் கடமையை நான் உணர வெளி உந்துதல்கள் அநாவசியம் என்பது மட்டுமே என்னுடைய
தீர்க்கமான நம்பிக்கை. அதன்படியே செயல்படுகிறேன். இன்னும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறைய கடமையாற்ற வேண்டும் என்கிற திட்டங்கள் இருக்கின்றன.
மீண்டும் சந்திக்கிறேன்.
சந்திப்பு/நேர்காணல்: எழுத்தாளர் அ.பாண்டியன்
No comments:
Post a Comment