கடந்த 20ஆம் திகதி மலாக்கா மாநிலம் சென்றிருந்தேன். பத்தாங் மலாக்கா
தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு.ராஜா அவர்களின் மூலம் மலாக்கா ஆசிரியர்களுக்கு
படைப்பிலக்கியம் பட்டறையை வழிநடத்த வாய்ப்புக் கிடைத்திருந்தது. காலையிலேயே 7.00மணிகெல்லாம்
மலாக்கா செண்ட்ரலை வந்தடைந்திருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆசிரியர் ராஜா
பள்ளியிலிருந்து கிளம்பி என்னை அழைத்துப் போவதற்கு வந்தார்.
பள்ளி வளாகத்திலேயே குளித்துக்கொள்ளலாம் என்றதும் எனக்கு அசூசையாக
இருந்தது. இருந்தபோதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அங்கிருந்து அவருடைய பள்ளியான
பத்தாங் மலாக்காவிற்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது. மலாக்கா காடுகளைக் கடந்து
பாதை நீண்டுகொண்டே போனது. மிகவும் சிறிய பாதை. இரு வழிக்கு ரொம்பவும் நெருக்கடியாக
இருந்தது. பத்தாங் மலாக்கா பற்றியும் மலாக்கா தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் திரு.ராஜா
சொல்லிக்கொண்டே வந்தார். தமிழ் மொழி சார்ந்து இவ்வருடத்தில் அங்கு நிகழும் முதல் நிகழ்ச்சி
இதுவென்று தெரிவித்தார். மற்றபடி அவர் தன் சக நண்பர்களுடன் இணைந்து தனிப்பட்ட முறையில்
பல நிகழ்ச்சிகளை அங்குச் செய்து வருகிறார்.
பத்தாங் மலாக்கா பள்ளியை வந்தடையும்போது 9மணி ஆகியிருந்தது. குளிர்ந்த
காட்டிற்கு நடுவே பெரிய பள்ளி அது. கொஞ்சம் பரப்பரப்பாக இருந்தது. ராஜா நேரே தலைமை
ஆசிரியரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். தலைமை ஆசிரியர் கொஞ்சம் வேலையாக
இருந்ததால் என்னைச் சரியாகக் கவனிக்கவில்லை. மேலும் அங்கேயே குளிக்கப் போவதாகச் சொன்னதும்
அவருக்கு அதிர்ச்சி போல. அரை மணி நேரத்திற்குள்ளேயே குளித்துத் தயாராகிவிட்டேன். அவர்
பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு பட்டறையை ஏற்படுத்தியிருந்தார். இரண்டு மனி நேரம் அவற்றை
வழிநடத்துவதாக ஒப்புக்கொண்டேன். எப்பொழுதும் மாணவர்களைச் சந்திப்பதிலேயே எனக்கு அதிக
விருப்பம்.
WORKSHOP AT BATANG MELAKA SCHOOL |
with SJKT BATANG MELAKA STUDENTS |
ராஜா அவர்கள் மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பிறகு, பட்டறையைத்
தொடங்கினேன். சிறுவர் கதைக்குரிய தன்மைகள் தொடர்பாகப் பேசினேன். ஒரு சில படங்களைக்
காட்டி விளக்கமளித்தேன். மாணவர்கள் பயிற்சியில் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள். இறுதியில்
தலைமை ஆசிரியர் முடிவுரை ஆற்றினார். அத்தனை நேரம் அமைதியாக இருந்தவர், என் பட்டறைக்குப்
பிறகு வேறு மாதிரி மாறியிருந்தார். புதிய தகவல்களைக் கொடுத்தமைக்கும் ஒரு முக்கியமான
எழுத்தாளர் தங்கள் பள்ளிக்கு வருகையளித்திருப்பதையும் எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். மாணவர்கள்
யாவரும் இனி எதிர்க்காலத்தில் படைப்பாளிகளாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடைய
உரையிலிருந்த உற்சாகம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. இலக்கியத்தின் மீதான் ஆர்வத்தை அவருக்குள்
காண முடிந்தது.
GIVING SPEECH TO MELAKA TEACHERS |
அலோர் காஜா தமிழ்ப்பள்ளியை அடைந்ததும் ஆசிரியர்கள் பலர் வந்துகொண்டிருந்தனர்.
அனைவரும் மூத்த ஆசிரியர்கள். என்னைப் பார்த்ததும் ஒரு சிலர் புதியதாக மாற்றலாகி வந்திருக்கும்
ஆசிரியர் எனச் சிலர் நினைத்தார்கள். இலக்கியம் பேச வருபவர்கள் என்றாலே வயதானவர்களாக
இருக்கும் என்ற நம்முடைய புரிதல். உணவுக்குப் பின் பட்டறையத் துவங்கினேன். 4 மணி நேரம்
ஓடி மறைந்ததே தெரியவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் மிக ஆர்வமாகப் பட்டறையில் கலந்துகொண்டனர்.
பலவகையில் கலந்துரையாடலை முன்னெடுக்க முடிந்தது. மலாக்கா தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்
திரு.அசோகன் அவர்கள் பட்டறைக்கு முன்னாடியே என்னைச் சந்தித்து உரையாடினார். அவருக்கு
வேறு நிகழ்ச்சி இருப்பதால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. உடனே புறப்பட்டுச்
சென்றார். மலாக்கா தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் மட்டும் இறுதிவரை பட்டறையில் உடன்
இருந்தார்.
சிறுவர் இலக்கியத்தை முன்னெடுப்பதன் நோக்கத்தை முதலில் ஆசிரியர்களுக்குத்
தெளிவுப்படுத்தினேன். தேர்வு ஆணையம் சிறுவர் இலக்கியத்தை மாணவர்களுக்குக் கொண்டு போவதன்
அவசியம் எதிர்க்கால இலக்கு குறித்து உரையாற்றினேன். இலக்கியத்தின் தேவை குறித்தும்
கொஞ்சம் சொல்ல நேர்ந்தது. கதை வளர்ந்த கதை எனும் அமர்வில் தொடங்கிய பட்டறை தொடக்கத்தை
எழுதும் பயிற்சிவரை நீண்டு சுவார்ஷ்யமான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தது. ஆசிரியர்களுக்குப்
பயிற்சி அளிப்பது இது நான்காவது முறையாகும். மாணவர்களுக்கே அதிகம் பயிற்சியளித்துள்ளேன்.
இருப்பினும் மலாக்கா தமிழாசிரியர்களின் ஆர்வம் வியக்க வைத்தது. நிகழ்ச்சி
முடிந்த ஒரு மணி நேரத்திலேயே அடுத்த பட்டறைக்கு வரச்சொல்லி தொலைப்பேசி அழைப்பு வந்தது.
கூடிய விரைவில் அங்குள்ள இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறுகதை பட்டறையை
வழிநடத்தவிருக்கிறேன். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கிள்ளானில் நடக்கும் ஆசிரியர்களுக்கான
சிறுகதை பட்டறையையும் வழிநடத்தவுள்ளேன். ஆகையால், ஆர்வமிருக்கும் ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளி
நண்பர்கள் என்னைத் தொடர்புக்கொள்ளலாம்.
016-4806241
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment