மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 18 May 2014

தன் வரலாறு : நான் ஒரு பேனா

சிறுவர் முதல் முதியோர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். நான் நீள் உருளை வடிவில் மெலிந்த உடலுடன் காட்சியளிப்பேன். என்னுள் உதிரம் ஊற்றப்பட்டிருக்கும். நான் தான் ஒரு பேனா.

என்னைப் பொதுவாகப் பேனா என்று குறிப்பிட்டாலும் என்னுடைய சிறப்பு பெயர் ‘பார்க்கார்’. ‘பார்க்கர்’ வம்சத்தில் பிறந்ததால் என்னையும் அப்படியே அழைத்தனர். என் உடலை இரும்பால் உருவாக்கினர். என் நுனிப்பகுதி எழுதுவதற்கு ஏதுவாகக் கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். என் உடலின் மேல் பகுதியில் விசை பொருத்தப்பட்டிருக்கும் வேளையில் என்னுள் கருப்பு நிற மை ஊற்றப்பட்டிருக்கும்.

நான் பேரும் புகழும் பெற்ற வரலாற்று மாநிலமான மலாக்காவில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையைப் பூர்வீகமாகக் கொண்டவன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் முழு உருவம் பெற்றதும் நெகிழிப் பையால் போர்த்தி  பின்னர் ஒரு பெட்டிக்குள் அடுக்கப்பட்டோம். தரமான முறையில் தயாரிக்கப்பட்ட நானும் என் உடன் பிறப்புகளில் சிலரும் அங்கிருந்து ஒரு வானூர்த்தியின் மூலம் பினாங்கு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டோம்.


ஒரு சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாங்கள் முத்துத் தீவில் கால் பதித்தோம். அங்கு என்னையும் என் உடன் பிறப்புகளையும் பிரித்துப் பல கடைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் விநியோகம் செய்தனர். நான் ‘ஜஸ்கோ’ என்ற பேரங்காடியை வந்து சேர்ந்தேன். அப்பேரங்காடியின் ஊழியர்கள் என்னைப் பெட்டியிலிருந்து எடுத்துப் பள்ளித் தளவாடப் பொருட்கள் விற்கும் பகுதியில் நேர்த்தியாக அடுக்கி வைத்தார்கள். விலை நிர்ணயிக்கப்பட்டு என் மேல் விலைப்பட்டைத் தொங்கவிடப்பட்டது. வாடிக்கையாளர்களின் கண்ணில் தென்படும் வகையில் என்னை ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்தனர். அங்கு நான் கம்பீரமாக வீற்றிருந்தேன்.

அப்பேரங்காடிக்குப் பலர் வந்து சென்றனர். ஆனால், யாரும் என்னை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இப்படியே நாட்கள் கடந்தன, என்னை வாங்கப் போவது யார் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன். ஒரு நாள் திரு.பாலமுருகன் என்பவர் அப்பேரங்காடிக்கு வந்தார். அப்பேரங்காடியை வலம் வந்தவரின் கண்ணில் நான் சிக்கினேன். என் அழகு அவரைக் கவரவே நூற்று ஐம்பது ரிங்கிட்டைக் காசாளரிடம் செலுத்தி என்னைத் தம் உரிமையாக்கிக் கொண்டார். நான் கண்ணீரும் கம்பளியுமாய் என் நண்பர்களை விட்டுப் பிரிந்து என் புது எஜமானருடன் புறப்பட்டேன்.

வீட்டிற்குச் சென்றதும் என்னை ஒரு மேசையின் மீது வைத்தார். மேசை முழுவதும் புத்தகங்கள் சிதறி கிடந்தன. ஒவ்வொரு புத்தகத்தின் அட்டையிலும் எழுத்தாளர் கே.பாலமுருகன் என அச்சிடப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அவர் நாடறிந்த ஓர் இளம் எழுத்தாளர் என்பதை உணர்ந்தேன். அவர் ஒவ்வொரு நாளும் என்னை எழுதப் பயன்படுத்துவார். என்னைத் துணையாகக் கொண்டு பல அற்புதமான கதைகளையும் கவிதைகளையும் எழுதுவார். அவர் கை விரலில் சிக்கி தவிக்கும் நான் பின்னர் பல எழுத்துப் படைப்புகளை இத்தரணிக்கு வழங்குவேன். என்னால் உருப்பெற்ற எழுத்துகள் படிப்பவரின் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்து விடும். என் பசிக்கு உணவாக அவ்வப்போது மை கொடுப்பார். என்னைக் கண்ணும் கருந்துமாகப் பார்த்துக் கொள்வார்.

இப்படியே என் வாழ்க்கை சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் அவரின் வாசகர்கள் சிலர் அவரை நாடி வந்தனர். அவருடன் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டனர். என் முதலாளியுடன் அளவளாவிக் கொண்டிருந்த வாசகர்களில் ஒருத்தியான யாழினி, மேசை மேல் இருந்த என்னைக் கண்டாள். அவரின் நினைவாக என்னைத் தரும்படி ஒற்றைக் காலில் நின்றாள். வேறு வழி இல்லாமல் என் முதலாளி என்னை அவளிடம் கொடுத்தார். நாடறிந்த எழுத்தாளர் பயன்படுத்திய பேனா நான் என்பதால் என்னை ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்துத் தன் படிப்பறையில் வைத்தாள். இப்பொழுது நான் யாழினியின் படிப்பறையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி & ஆக்கம்: ஆசிரியை ந.கோமதி.

சீரமைப்பு & தொகுப்பு: கே.பாலமுருகன்


No comments:

Post a Comment