மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday 19 September 2015

சிறுகதை: ரோத்தான் ( ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)


 1

“சார் உங்கள யாரு ரோத்தானை எடுக்க சொன்னது? அதான் இப்பல்லாம் ஆ ஊ-ன்னா பெரிய பெரச்சன ஆவுதே? இப்ப உள்ள பேரண்ட்ஸ் என்னானு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?”

தலைமை ஆசிரியர் திரு.இராமையா கொஞ்சம் நடுங்கியே போயிருந்தார். அவர் அடுத்த வருடம் பதவி ஓய்வு பெறவிருக்கும் இக்காலக்கட்டத்தில் இப்படியொரு சோதனை வந்து சேர்ந்தது.

“தர்மலிங்கம் இங்க வாங்க…இப்ப அந்த ஆளு என்னத்தான் சொன்னாரு?”

“அவர் வழிக்கு வரமாட்டராரு சார். பலமுறை சொல்லியாச்சாம். இந்த வாத்தியாரு கேட்காமல் அடிச்சிருக்காரு. போலிஸ் ஸ்டேஷன் போவேன்னு நிக்குறாரு”


குமரகுரு இப்பள்ளிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை அவர் பல பள்ளிகள் மாற்றப்பட்டிருக்கிறார். எல்லாம் பள்ளிகளிலும் ரோத்தான்தான் அவர் பிரச்சனையே. ஒவ்வொரு வாரமும் அவரால் பள்ளியில் பல சர்ச்சைகள் உருவாகும். பள்ளி வாசல்வரை வந்து கத்திவிட்டுப் போகும் பெற்றோர்களும் உண்டு.

“ஏன் சார் நீங்க இப்படி இருக்கீங்க? இப்ப யாருக்குப் பிரச்சனை? மேலடத்துல என் தலைய உருட்டுவான், தெரியுமா?”

“சார் பரவால… என்னைத்தான் பள்ளிய மாத்துவாங்க. நான் பாத்துக்குறன். நீங்க என்னால கஸ்டப்பட வேண்டாம்”

“ஆங்ங்ங் சின்னாங்க சொல்லிட்டிங்களே! அதெல்லாம் அப்படி இல்ல சார். நீங்க அடிச்ச அடில அந்தப் பிள்ள கையெலும்புல அடிப்பட்டிருக்கு சார். போலிஸ் கேஸ் சார். எவ்வளவோ பட்டுட்டிங்க. ஏன் சார் புத்தி வர மாட்டுது?”

“இங்க பாருங்க சார். ரோத்தான் நானா கேட்டேன்? அடிக்கக்கூடாதுனா ரோத்தானே பள்ளில இருக்கக்கூடாது சார்!!! நம்ம பிள்ளைங்களா நினைச்சித்தானே அடிக்குறோம். அது சில சமயத்துல இப்படி ஏடாகுடமா பட்டுருது”

“குமரகுரு சார்…ரோத்தான் வச்சி மிரட்டலாம். இலேசா தட்டலாம். முட்டிக்குக் கீழ அடிக்கலாம். அதை வெச்சி குற்றவாளிய அடிக்கற மாதிரியா அடிக்கிறது?”

“சார் நான்லாம் கையெழுத்து நல்ல வரணும்னு வாத்தியார்கிட்ட முட்டில அடி வாங்கி வந்தவந்தான். இப்ப மட்டும் என்னாவாம்? ஆசிரியர்கள் அடிக்கவே கூடாதுனு அப்ப எப்படி சார் மாணவர்கள் நல்ல வழிக்கு வருவாங்க? அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிங்கக்கூட உதவமாட்டாங்க சார்”

குமரகுருவின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்திருந்தன. கொஞ்ச நேரத்தில் தர்மலிங்கம் மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்குள் பதற்றத்துடன் வந்தார்.

“சார் அந்தப் பிள்ளையோட அப்பா கத்திக்கிட்டே வர்றாரு… இப்ப எப்படி சார்?”

“குமரகுரு சார். நீங்க இங்கயே இருங்க. நான் பேசிப் பாக்கறேன்”

திரு.இராமையா அவருடைய கழுத்துப்பட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார். கீழே இறங்கியதும் கையில் ஒரு கட்டையுடன் மாணவியின் அப்பா கணேசன் வருவது தெரிந்தது.

“குணா! இங்க வாங்க. அந்த ஆளு கையில கட்டை இருக்கு. அதை முதலில் வாங்கிட்டு உள்ள அனுப்புங்க. இல்லைனா விடாதீங்க. ரொம்ப கத்தனா நான் போலிஸ்ல சொல்றென்”

திரு.இராமையாவிற்கு இது புதிதல்ல. 1960களிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பள்ளிக்கூடம் மதிக்கத்தக்க இடமாக இருந்த ஒரு காலத்தை நினைத்துப் பார்த்தார். சட்டென மனத்தின் ஓரத்தில் ஒரு வெட்டு.

“சார் அவரு கத்துறாரு. நீங்க வந்து பேசிப் பாருங்க”

குணா அழைத்ததும் தலைமை ஆசிரியர் பெரிய கதவை நோக்கிக் கொஞ்சம் தயக்கத்துடன் நடந்தார்.

“கணேசன் என்னா இது? ஏன் கட்டைலாம்? கொஞ்ச படிச்ச மாதிரி நடந்துக்குங்க, ப்ளிஸ்”

“சார் அவன் படிச்ச வாத்தியாரு மாதிரியா நடந்துக்குறான்? பிள்ளைய போட்டு அப்படி அடிச்சிருக்கான். முட்டி எலும்புல க்ரேக் விட்டுருச்சி தெரியுமா? இதுக்கா பிள்ளைய பெத்துப் பள்ளிக்கு அனுப்புறோம்?”

“புரியுது கணேசன். நானும் பிள்ளைங்கள பெத்தவந்தான். உங்க வேதனை புரியுது. நிதானமா பேசலாம் கணேசன். தெரியாம நடந்துருச்சி…இந்தத் தடவ மன்னிச்சிருங்க…”

“என்ன சார் மன்னிப்பு? ஒரு தடவயா ரெண்டு தடவயா? எத்தனமுறை சொல்லிருக்கென். நான் ஒரு மாதிரி இதோட நிப்பாட்டிக்கோனு…என்ன சார் இது? ஆடா மாடா? பெத்த பிள்ள சார்”

“சரிங்க கணேசன். அவரையே மன்னிப்பு கேட்க சொல்றேன். இனிமேல் ஏதும் நடக்காமல் நான் பாத்துக்குறன். இல்லாட்டி அவரை வேறு பள்ளிக்கு மாத்திடுறேன்”

“முடியாது சார். அவன் எங்கப் போனாலும் இப்படித்தான். இந்தக் கட்டைலெ அவன் கைய உடைச்சிட்டு நானும் மன்னிப்பு கேட்டுக்குறன். சரியா போய்டும். எப்படி சார் சொல்லுங்க?”

Friday 11 September 2015

KSSR - தமிழ்மொழி : கதை எழுதும் திறன் ( பயிற்சி)

வணக்கம் ஆசிரியர்களே/ மாணவர்களே,

கீழே வழங்கப்பட்டிருக்கும் பயிற்சி ஐந்தாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கானது. இப்பொழுதே மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கிவிட்டால் அடுத்த வருடம் ஏதுவாக இருக்கும். நன்றி.

கே.பாலமுருகன்



Thursday 10 September 2015

புதிய கலைத்திட்டத்திற்கான இரட்டைக் கிளவிகள் - KSSR TAHUN 1- TAHUN 5

வணக்கம் ஆசிரியர்களே/ மாணவர்களே,

யூ.பி.எஸ்.ஆர் முடிவடைந்ததை அடுத்து இத்தலம் ஓய்ந்துவிடாது. இனி கே.எஸ்.எஸ்.ஆர் மாணவர்களுக்கான ஆவணங்கள் தொடர்ந்து வழங்கப்படும். காரியம் முடிந்ததும் கழன்றுவிடும் போக்கில்லாமல், தமிழுக்காக வேறு என்ன செய்ய முடியும் என சிந்திப்போமாக. நீங்களும் இத்தலத்திற்கான தரவுகளை அனுப்பலாம். பேருதவியாக இருக்கும். பகிர்ந்து உதவி செய்வோம்.

bkbala82@gmail.com

கே.பாலமுருகன்



Wednesday 9 September 2015

2015 யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தாள் இரண்டு குறித்து:



சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு பகாங் மாநிலத்தின் தேர்வொன்றில் 'நான் விந்தை மனிதனானால்' எனும் தலைப்பு வெளியாகி கொஞ்சம் சர்ச்சையும் உருவானது. ஆகவே, நான் என் யூ.பி.எஸ்.ஆர் வலைத்தலத்தில் உருமாறுவதற்கும் விந்தை மனிதனாக மாறுவதற்குமான விளக்கத்தைக் கொடுத்திருந்தேன். ஆனால், இன்று உருமாறுதல் தலைப்பாக வரும் என நினைத்துப் பார்க்கவில்லை. இருப்பினும், அந்த விவாதம் இன்று பலருக்கு நன்மை அளித்ததாகத் தகவல் கிடைத்தது. பலர் அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.
அடுத்ததாக, இவ்வாண்டு நான் எழுதிய கற்பனைக் கட்டுரைகள் அடங்கிய நூல் ' அதிசயத் தீவும் அற்புதக் காலணியும் ' 6000 பிரதிகள் விற்பனையாகி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே சயமம் நிறைய மாணவர்கள் இவ்வாண்டு வெளிவந்த கற்பனைக் கட்டுரையைத் தலைப்பாக எடுத்திருப்பதாகப் பல ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாண்டு எனது முயற்சிகளுக்குக் கிடைத்த இரட்டிப்பான மகிழ்ச்சி இது. முயற்சிகள் மேலும் தொடரும். அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்தும் நன்றியும். நான்காண்டு காலமாக இயங்கி வரும் என்னுடைய யூ.பி.எஸ்.ஆர் வலைத்தலம்( http://btupsr.blogspot.com ) உங்களுக்குக் கைக்கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தேர்வு தாள் ஒன்றில் வந்திருந்த சிறுகதை(படைப்பிலக்கியம்) எனது ' மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்' எனும் சிறுவர் நாவலின் கடைசி பாகத்தில் வருவதைப் போன்று சிறுவன் ஆபத்துக்காகக் காரைச் செலுத்தும் கதையே. படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனையோ சிறுவர்கள்/ மாணவர்கள் அதனை வாசிக்கும்போது சிறுவர் நாவல் ஞாபகத்திற்கு வந்திருக்கும். வாசிப்பே நம் பிரதானம்.

- கே.பாலமுருகன்

Monday 7 September 2015

வாழ்த்துக் கட்டுரை: யூ.பி.எஸ்.ஆர் என்பது பந்தயம் அல்ல; ஆறாம் ஆண்டு சோதனை மட்டுமே

மாணவர்களுக்கு,

இவ்வாண்டு நாளை முதல் வியாழன்வரை தேர்வெழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனம் தளறாமல் முயற்சியைக் கடைசிவரை மேற்கொள்ளவும். நீங்கள் போட்ட உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி உங்களின் சொந்த திறனையும் ஆசிரியர்கள் உங்களுக்காகக் காட்டிய வழிகாட்டுதல்களையும் மட்டும் மனத்தில் நிலைநிறுத்தி கேள்விகளை நிதானமாகப் படித்து விடையளிக்கவும். நீங்கள் இத்தனை காலம் படித்தவை அனைத்தும் உங்கள் நினைவிற்கு வர இயற்கையிடம் கேட்டுக் கொள்கிறேன். சுடர் நூல் மூலமும் எனது பயிற்சிப்பட்டறைகளின் மூலம் மலேசியாவில் வாழும் பல்லாயிரணக்கான மாணவர்களுக்கு என்னால் இயன்றவரை வழிகாட்டியிருக்கிறேன். அவற்றை நலம்பட செய்ய ஒத்துழைத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. வெற்றி நிச்சயம்.

ஆசிரியர்களுக்கு,

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக இதுநாள்வரை நீங்கள் செலுத்திய அக்கறைக்கும் உழைப்பிற்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். ஆகவே, உற்சாகத்துடன் உங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைக்கவும். கடைசி நேரத்தில் இயற்கை அவர்களுக்கு உதவும் என நம்புங்கள். யூ.பி.எஸ்.ஆர் என்பது மாணவர்களுக்கான திறன் மதிப்பீடு மட்டுமே. ஆசிரியர்களையும் பள்ளியையும் மதிப்பீடு செய்யும் ஒரு கருவியாக யூ.பி.எஸ்.ஆர் பார்க்கப்படுவதில் எனக்கு எப்பொழுதும் முரணான கருத்துண்டு. ஓர் ஆசிரியரின் வேலை தரத்தை யூ.பி.எஸ்.ஆர் என்கிற ஒரு சோதனையை முன்வைத்து மதிப்பீடுவதோ அல்லது முடிவுக்கு வருவதோ மிகவும் தவறான அணுகுமுறையாகும்.


சோதனை என்பது மாணவர்கள் அக்கணம் இருக்கும் மனநிலையோடு எதிர்க்கொள்வதாகும். அவர்களின் மனநிலைக்கும் கிரகிக்கும் திறனுக்கு ஏற்பவும் அவர்கள் சோதனையை மேற்கொள்கிறார்கள். அங்கு சில புரிதல் தொடர்பான சிக்கல்கள் நடக்க வாய்ப்புண்டு. அதனை முன்வைத்து ஓர் ஆசிரியரின் உழைப்பை விமர்சிப்பதும் தவறே. எத்தனையோ நல்லாசிரியர்கள் மெதுபயில் மாணவர்களைச் சிரமப்பட்டு தேர்ச்சியாக்கியிருக்கிறார்கள். ஆனால், சமூகம் அவர்களைக் கண்டுகொண்டதே இல்லை. அவர்களும் சமூக கவனத்திற்காகக் காத்திருக்காமல் அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகின்றனர். நல்லாசிரியர் என்பது எத்தனை மாணவர்களை 'ஏ' பெற வைக்கிறார்கள் என்பதில் இல்லை என்பதை நம்புங்கள். 

தலைமை ஆசிரியர்களுக்கு,

மரியாதைக்குரிய தமிழ்ப்பள்ளிகளின் வேலிகளாக இருந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள். யூ.பி.எஸ்.ஆர் ஒன்றை மட்டுமே முன்வைத்து பள்ளியின் மீது திணிக்கப்படும் மதிப்பீட்டு பார்வைக்கு சற்றும் செவிசாய்க்க வேண்டாம். ஆண்டு முழுவதும் உழைப்பையும் கவனத்தையும் போட்டு நீங்கள் உருவாக்கிய மாணவர்களின் வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்த்து அதனை ஏற்றுக்கொண்டு பக்குவத்துடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிடவும். சக தலைமை ஆசிரியர்கள் உங்களோடு அவர்களின் அடைவை ஒப்பிட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமையக்கூடும். அதனைச் சற்றும் பொருட்படுத்தாதீர்கள். 

ஒவ்வொரு பள்ளியும் தனித்துவமானவை. பல வகைகளில் வேறுபட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் ஒன்று கிடையாது. ஒவ்வொரு மாணவனுக்கும் பின்னணியில் அவனது குடும்பம், அவன் வாழும் சமூகம் என எத்தனையோ விசயங்கள் அடங்கியிருக்கின்றன. ஆகவே, நாம் வாழும் சூழலுக்கும் நாம் பணியாற்றும் சமூகத்திற்கும் ஏற்ப நாம் போடும் முயற்சிகளின் பலன்களும் அடைவும் பிரதிபலிக்கின்றதை எங்கோ நம்முடன் சம்பந்தப்படாமல் இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

உங்களின் தலைமைத்துவம் எப்பொழுதுமே சளைத்தவை அல்ல. நம்பிக்கையுடன் அடுத்த அடியை எடுத்து வைப்போம். உங்களோடு தமிழ்ப்பள்ளியின் முன்னேற்றத்திற்குக் கைக்கோர்த்து உழைக்க ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, யூ.பி.எஸ்.ஆர் என்பதைப் பந்தயம் என நினைக்காமல் உங்கள் ஆசிரியர்களின் உழைப்பை இதன்வழி மதிப்பீடு செய்யாமல் மாணவர்களைத் திறன்மிக்கவர்களாகவும் படைப்பாற்றமிக்கவர்களாகவும் எதிர்கால சவால்களைச் சந்திக்கும் ஆற்றமிக்கவர்களாகவும் உருவாக்க மாற்றுவழிகளை ஒன்றிணைந்து யோசிப்போம். ( உங்கள் அனுபவம் என் வயதாக இருப்பினும் தமிழால் நின்று கருத்துரைக்கும் யாவரும் சமமே என்கிற நம்பிக்கையில்)

பெற்றோர்களுக்கு,

ஒவ்வொரு கணமும் பிள்ளைகள் வாழ்வில் வெற்றிப்பெற வேண்டும் என அரும்பாடுபட்டு உழைக்கும் பெற்றோர்களுக்கு வணக்கம். யூ.பி.எஸ்.ஆர் சோதனை எஸ்.பி.எம் சோதனைக்கு நிகராகப் பார்ப்பதைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். அத்தனை கணமான சுமையை உங்கள் 12 வயதே ஆன பிள்ளைகளின் மீது திணிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதனை அவர்களால் சுமக்கவும் முடியாது.

உங்கள் சொந்த கௌரவத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அவர்களின் மீது செலுத்தி அவர்களைப் பந்தைய குதிரைகளாக மாற்றும் வழக்கத்தை இச்சமூகமும் பெற்றோர்களும் கைவிட வேண்டும். அவர்களின் திறனுக்கும் அறிவுக்கும் ஏற்ப அச்சமயம் கொடுக்கப்படும் சோதனையை எதிர்க்கொள்ளப் போகிறார்கள். அதில் சில ஏற்றமும் இறக்கமும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளவும். உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒன்றில் நிச்சயம் கெட்டிக்காரர்களாக இருக்கக்கூடும். சிலர் ஓவியத்தில், சிலர் விளையாட்டில், சிலர் நடிப்பில், சிலர் வர்ணம் தீட்டுவதில். அதனை முதலில் கண்டறிந்து அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் நினைப்பதைப் போல அவர்கள் அனைத்திலும் கெட்டிக்காரர்களாக உருவாகி வருவார்கள்.

நல்வாழ்த்துக் கூறி அடுத்த கட்டத்தில் மீண்டும் ஒன்றிணைவோம் என்கிற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

-    திறமிகு ஆசிரியர் கே.பாலமுருகன்.


Wednesday 2 September 2015

‘வெற்றி நிச்சயம்’ யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தாள் இரண்டு ஒரு விளக்கம்


வ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதவிருக்கும் அன்பார்ந்த மாணவர்களே, சோதனைக்குச் சில நாட்களே இருக்கும் இந்த வேளையில் தமிழ்மொழித் தாள் இரண்டைக் குறித்து ஒரு பொதுவான விளக்கம் கொடுக்கவே இதனை எழுதுகிறேன். கடந்த நான்காண்டு காலமாக மலேசியாவில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தமிழ்மொழிக்குப் பயிற்சியளித்த அனுபவத்திலும் தமிழ்மொழிக்கான திறமிகு ஆசிரியர் என்கிற கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட பதவியின் அடிப்படையிலும் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழிக்கான எனது தேடல் விரிவானதாகும். அப்படிப்பட்ட அனுபவத்தின் மூலம் உங்களுக்கு இப்பொழுது வழிகாட்டுகிறேன்.

தமிழ்மொழித் தாள் இரண்டு மூன்று பிரிவிகளால் ஆனதாகும். முதல் பகுதியான வாக்கியம் அமைத்தல் பிரிவைக் கவனிப்போம்.

வாக்கியம் அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

Ø  - ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனி வாக்கியம் மட்டுமே அமைத்தல் வேண்டும்.
Ø  - சொல்லை விளக்கக் குறைந்தது ஒரு குறிப்புச்சொல் வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்புச்சொல் உள்ள வாக்கியத்திற்கே முழுப்புள்ளி வழங்கப்படும்.
Ø  - சொல்லின் பொருள் மாறாதபடி, அதனுடன் உருபுகளோ அடைகளோ விகுதிகளோ சேர்த்துக் கொள்ளலாம்.
Ø  - கொடுக்கப்பட்ட சொல்லோடு வேறோரு சொல்லை இணைத்து, புதியதொரு சொற்றொடருக்கு வாக்கியம் அமைத்தல் கூடாது.

மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் உங்களின் யூ.பி.எஸ்.ஆர் தாள் இரண்டில் காணலாம். அதற்கேற்பவே நீங்கள் வாக்கியங்கள் அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:
நடுஅப்பா தோட்டத்தில் குழியை வெட்டி செடியை நட்டார்.

மேற்கண்ட வாக்கியத்தைக் கவனிக்கவும். நடு எனும் வழங்கப்பட்ட சொல் நட்டார் என மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றுவது சரியா? மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறையின்படி கொடுக்கப்பட்ட சொல்லில் விகுதியைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பது ஏற்கத்தக்கதே. ஆகவே, நடு எனும் சொல்லை நட்டார், நட்டாள், நட்டான், நட்டனர், நட்ட, நட்டு என மாற்றிக்கொள்ளலாம். அடுத்து இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்:

படி குமரன் மாடிக்குச் செல்லப் படியில் ஏறினான்.

மேற்கண்ட வாக்கியத்தில் கொடுக்கப்பட்டபடிஎன்ற சொல், ‘படியில்என மாற்றப்பட்டுள்ளது சரியா? மேலே கொடுக்கப்பட்ட விதிமுறையின்படி கொடுக்கப்பட்ட சொல்லில் வேற்றுமை உருபைச் சேர்த்துக்கொண்டால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே, மறவாமல் கொடுக்கப்பட்ட சொல்லிற்கு வாக்கியத்தில் கோடிடவும்.
இன்னொரு வாக்கியத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:

அழகுஉலக அழகி அணிந்திருந்த ஆபரணங்கள் அழகாகக் காட்சியளித்தன.

மேற்கண்ட வாக்கியத்தில்அழகுஎனும் சொல் அழகாக என மாற்றப்பட்டிருப்பது சரியா? விதிமுறையின்படி கொடுக்கப்பட்ட சொல்லுடன் அடைகளைச் சேர்த்துக் கொள்ளுதல் முடியும். ஆன என்கிற பெயரடையையும் ஆக என்கிற வினையடையும் சேர்த்து வாக்கியம் அமைத்தல் முடியும். மாணவர்களே தயவு செய்து வாக்கியத்தில் இலக்கணப்பிழைகள்/ எழுத்துப்பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். முழுப்புள்ளிகள் பெற வேண்டுமென்றால் அவ்விரண்டு பிழைகளையும் தவிர்த்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக:

இலக்கணப்பிழைகள்:

அது அம்மா வைத்தக் கறி எனும் வாக்கியத்தில் வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருப்பின் அஃது வரும் எனும் இலக்கண மரபைப் பின்பற்றவில்லை. ஆக, இவ்வாக்கியம் பிழையாகக் கருதப்படும்.

எழுத்துப்பிழைகள்:

குமரன் புத்தகத்திலுள்ள கதைகளை படித்தான் எனும் வாக்கியத்தில் கதைகளை எனும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை உருபானக்குப் பிறகு ,,, வந்தால் வலிமிகும் எனும் எழுத்திலக்கணத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, மாணவர்களே வாக்கியம் அமைத்த பிறகு ஒருமுறை இலக்கணப்பிழைகளும் எழுத்துப்பிழைகளும் இல்லாமல் சரிப்பார்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, பிரிவில் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைக் கொண்டு ஒரு சிறுகதை எழுத வேண்டும். யூ.பி.எஸ்.ஆர் தாள் இரண்டில் கொடுக்கப்படும் கட்டளையைப் பார்ப்போம்.


பிரிவு : வழிகாட்டிக் கட்டுரை
(20 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிப்படத்திற்கு ஏற்ப 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு சிறுகதை எழுதுக.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையைக் கருத்தூன்றி வாசித்தால் கொடுக்கப்பட்டிருக்கும் படம்(தனிப்படம்/ தொடர்ப்படம்) ஒரு சூழலை/ சம்பவத்தை மையமாகக் கொண்டு வரும் எனப் புரிந்து கொள்ள முடியும். அதனை நன்குணர்ந்து மாணவர்கள் சுவாரிஷ்யமான ஒரு சிறுகதையைச் சுவைப்பட எழுதிட வேண்டும். இப்பகுதியில் மாணவர்கள் எழுதுவது கட்டுரையல்ல ஆகவே கட்டுரை நடையில் இருத்தல் கூடாது. செய்யுள் மொழியணிகளை மாணவர்கள் கதையில் தனித்து விளக்கமளித்தல் கட்டுரைக்கான ஒரு நடையை உருவாக்கிவிடும். ஆகவே, மாணவர்கள் செய்யுள் மொழியணிகளைக் கதையில் இடம்பெறும் வசனங்களில் கதாபாத்திரங்கள் உச்சரிப்பதைப் போன்று எழுதினால் கதைக்கு இயல்பானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக:

டேய்ய்ய் முகிலா! முன் வைத்த காலைப் பின் வைக்கக்கூடாதுனு உனக்குத் தெரியாதாடா என்கிற வசனத்தில் செய்யுளும் மொழியணியும் கதைக்குள் இடையூறாக வராமல் இயல்பாக வந்து நிலைக்கின்றது.

மேலும், சிறுகதையில் வர்ணனைகளை மாணவர்கள் சேர்த்து எழுதினால் சிறப்பாக இருக்கும். கால வரணனை, கதைக்கள வர்ணனை போன்றவற்றை மாணவர்கள் கையாளலாம். 80 சொற்களுக்குக் குறையாமல் அதே சமயம் கொடுக்கப்பட்ட நேரத்தைக் கவனத்தில் கொண்டு கதை நீளமாக இழுத்துக் கொண்டு போகாமலும் கவனித்துக் கொள்ளவும். கதையில் முதன்மை கதைப்பாத்திரத்திற்குப் பெயர்கள் வழங்கப்பட்டிருந்தால் அதனையே பயன்படுத்தவும். பெயரை மாற்றுவது தவறாகும். கதை முடிவு வித்தியாசமானதாக இருக்கும்படி எழுதவும். ஓர் எதிர்ப்பாராத முடிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும் மாணவர்கள் கதையில் வரும் வசனங்களைத் தனிப்பத்தியில் எழுதிட வேண்டும். இரண்டு வசனங்களை ஒரே பத்தியில் எழுதுவதன் மூலம் குழப்பங்கள் ஏற்படலாம். தமிழ்மொழித் தாள் ஒன்றில் வரும் படைப்பிலக்கியப் பகுதிகளில் இருக்கும் சிறுகதைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வாசிக்கவும்.

டுத்து, திறந்தமுடிவுக் கட்டுரைக்கான பிரிவைப் பார்க்கலாம். இதில் மொத்தம் மூன்று தலைப்புகள் வரும். மாணவர்கள் ஏதேனும் ஒன்றனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுத வேண்டும். யூ.பி.எஸ்.ஆர் தாளில் இடம்பெறும் கட்டளை பின்வருமாறு:


பிரிவு : திறந்தமுடிவுக் கட்டுரை
(30 புள்ளிகள்)

கீழ்காணும் 1,2 3 ஆகிய தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 120 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட கட்டளையின்படி மாணவர்கள் 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரையை எழுதிட வேண்டு என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். திறந்தமுடிவுக் கட்டுரையில் மாணவர்கள் முன்னுரையிலும் கருத்திலும் முடிவுரையிலும் செய்யுளும் மொழியணிகளையும் பயன்படுத்துவது இன்றியமையாத சிறப்பைச் சேர்த்திடும்.

திறந்தமுடிவுக் கட்டுரையில் இடம்பெறும் மூன்று தலைப்புகளைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். அதில் அமைப்புக் கட்டுரைக்கான பகுதியில் அதிகார்வப்பூர்வக் கடிதம், அதிகார்வப்பூர்வமற்ற கடிதம், உரை, அறிக்கை போன்றவை இடம்பெறும். மூன்றாவது தேர்வில் தன் வரலாறு, கற்பனைக் கட்டுரை இடம்பெறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

முதல் தலைப்பில் ஒரு சொல் கட்டுரை, பழமொழிக் கட்டுரை, கருத்துவிளக்கக் கட்டுரை போன்றவை இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக: நீரின் பயன், பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதால் ஏற்படும் விளைவுகள், ஆழம் அறியாமல் காலை விடாதே, சேமிப்பின் அவசியம், தந்தை, என வகைப்படுத்தலாம். ஒரு சொல் கட்டுரை என்பது தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தை வைத்துக் கட்டுரையை எழுதக்கூடாது. மாணவர்கள் அத்தலைப்பைப் பொதுவான ஒரு நிலையில் வைத்துக் கருத்துகளை எழுத வேண்டும்.

கற்பனைக் கட்டுரை இந்த நூற்றாண்டு மாணவர்களின் புத்தாக்கத் திறன், ஆக்கத் திறனை வளர்க்கும்படியான கட்டுரை பகுதியாகும். மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பை மையமாகக் கொண்டு கற்பனையை உயர்நிலை சிந்தனையுடன் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக:

நான் விந்தை மனிதனானால் எனும் தலைப்பில் மாணவர்கள் நான் மரமாவேன், நாற்காலியாவேன் என எழுதினால் அக்கருத்து தவறானதாகவும் தலைப்புக்கு ஒவ்வாத ஒன்றாகவும் கருதப்படும். ஒரு மனிதன் சாதாரண மனிதனாக இல்லாமல் விந்தை மனிதனாக மாறுவதைப் போன்று கற்பனை செய்து எதிர்காலத்தில் அக்கற்பனைகளை எழுத வேண்டும். உதாரணமாக, குதிரை மனிதனாக மாறுவது, மரம் போன்ற மனிதனாக மாறுவது என விளக்கலாம்


ஆகவே, மாணவர்களே இவ்விளக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். எனது மற்றுமொரு இறுதி கட்டுரையில் தாள் ஒன்றிற்கான சில உத்திகளையும் விளக்கங்களையும் தருகிறேன். சுடர் விடுவோம் வெற்றி நிச்சயம். அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் கே.பாலமுருகன் 0164806241. நன்றி. வெற்றி நிச்சயம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்