மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Friday 14 September 2018

கேள்வி பதில் பாகம் 1: பி.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி- மர்மம் என்பது ஒரு படைப்பு உத்தியாகும்


  

ஆரம்பக்கல்வித் தேர்வில் இடம் பெற்றிருக்கும் ‘வழிகாட்டிக் கட்டுரைஅல்லது சிறுகதை தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள், விவாதங்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை எழுதுதல் தொடர்பான கருத்தரங்குகள், பட்டறைகள் என நாடு முழுவதும் சென்று வழிகாட்டியும் பேசியும் வருகிறேன். நாட்டிலுள்ள பல ஆசிரியர்கள் சிறுகதை பயிற்று விப்பதில் ஆர்வம் காட்டியும் வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் துறைக்கு வரும் முன்பே இலக்கியம் என்பதன் மீதான எனது ஈடுபாடும் தேடலும் விரிவானது ஆகும். பின்னர். இத்துறைக்கு வந்த பின்னர் 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் சிறார் இலக்கியம் பற்றி கவனம் செலுத்தத் துவங்கினேன். கடந்த எட்டாண்டுகள் எனது தேடல் சிறார் இலக்கியத்தின் மீதும் அதன் அணுகுமுறையின் மீதும் அழுத்தமாகக் குவிந்தன. 

இரண்டாண்டுகள் கல்வி அமைச்சு ரீதியிலும் 'சிறுவர் சிறுகதை' தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்களிலும் இடம் பெற்றதன் வாயிலாக என் அனுபவத்தை மேலும் ஆழமாக்கிக் கொண்டேன். அதன் தொடர்ச்சியாக சிறுவர் நாவல் ஒன்றை முதன் முதலாக 2014ஆம் ஆண்டில் எழுதி, சிறார் வாசிப்பு- எழுத்து ஆகியவற்றின் மீதான இரசனை மீட்சியை உருவாக்க முடிந்தது.

'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்என்கிற மர்ம நாவலின் வாயிலாக மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தையும் எழுதும் முனைப்பையும் ஒன்று திரட்டி மேம்படுத்த இயன்றது. அப்பயணம் இன்றும் தொடர்கிறது. ஏறக்குறைய இச்சிறுவர் நாவல்களைத் தொடர்ச்சியாக வாசிக்கும் 5000 க்கும்  மேற்பட்ட  மாணவர்களை வெவ்வேறு காலக் கட்டங்களில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்களுள் சிலர் சிறுவர் குறுநாவல்கள் எழுதியும் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சிறார் இலக்கியத்தைப் புரிந்து வைத்திருப்பதன் மூலம் உருவாக்க இயன்ற ஒரு இரசனை மாற்றம் ஆகும்.




மலாய் இலக்கியத்தில் கடந்த பல ஆண்டுகளாக சிறார் இலக்கியப் படைப்புகள் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவது அவர்களின் வாசிப்புத் தேடலைக் காட்டுகிறது. 1994-1998 ஆண்டுகளில் நான் மலாய் சிறுவர் மர்ம நாவல்கள் வாசிக்கத் துவஙகிய காலக்கட்டம். எண்ணற்ற மலாய் சிறார் நாவல்கள் அச்சமூகத்தின் வாசிப்பார்வத்தை மேம்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஆகவேதான், இன்று மலாயில் பல இலக்கியப் படைப்புகள் உருவாவதற்கு சிறார் இலக்கியம் உருவாக்கிய தாக்கம் ஒரு காரணம் ஆகும்.

எப்பொழுதுமே இலக்கியம் என்பது புறவயமானது அல்ல; அது அகவயப்பூர்வமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இலக்கியம், திட்டவட்டமாக எதனையும் வரையறுக்க முடியாத ஒரு கலை வடிவம் . ஆனால்சிறார்களுக்கு இதனைக் கற்றல் கற்பித்தல் வழியாக வடிவமைக்கும்போது நாம் சில அணுகுமுறைகளை அவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அவற்றை அனுபவப்பூர்வமாகக் கொண்டு செல்லும்போது மேலும் உயிர்ப்பாக இருக்கும். அதனை ஆசிரியர்கள் மத்தியில் சாத்தியப்படுத்தவே இக்கலந்துரையாடல் அல்லது கேள்விப் பதில் தொடர் ஆகும்.

ஆனால், தொடர்ச்சியாக சிறுகதை எழுதுவதில், சிறுகதைகள் வாசிப்பிலும் நம் மாணவர்கள் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியை நிலை உள்ளது. இச்சிறுவர் பருவம் என்பது புறச்சூழலின் தாக்கத்தால் தடம் மாறக்கூடியவை ஆகும். ஆகவே, அவர்களை வசீகரிக்க, அவர்களை எப்பொழுதும் வாசிப்பில் ஆழ்ந்திருக்கச் செய்ய படைப்புத்தியின் மீது நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே, இத்தொடர் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. 

கேள்வி 1: சிறுகதையில் மர்மம் அவசியமானதா(மாணவி புவனா, காஜாங்) 

கே.பாலமுருகன்: மர்மம் என்பது ஒரு வகையான படைப்புத்தி ஆகும். பெரும்பாலும் உலகளவில் வெற்றிப் பெற்ற பல படைப்புகள் 'மர்மம்' என்கிற உத்தியைக் கையாண்டவையாகும். குறிப்பாக உலகத்தையே வியக்க வைத்த ஜே.கே ரவ்லிங் எழுதிய 'ஹெர்ரி போட்டர்' நமக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 

கற்பனைவளத்தை மீண்டும் சிறார்களின் மனத்தில் மேலோங்கச் செய்திட அந்நாவலின் எழுத்தாளர் பிரதானமாகக் கையாண்டிருக்கும் உத்திகளுள் ஒன்று மர்மம் ஆகும். சிறார்களின் வாசிப்பு ஆர்வத்தை வசப்படுத்தவும், சிறார்களை எழுத தூண்டவும் இப்படைப்புத்தி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதனைக் கருத்தில் கொண்டுதான் 2005ஆம் ஆண்டிலிருந்து தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வழிகாட்டிக் கட்டுரை' பிரிவுக்காக வழங்கப்படும் பல படங்கள் 'மர்மம்' என்கிற உத்தியைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருப்பதை ஒரு சான்றாக எடுத்துக்கொள்ள முடியும்.


Sumber: Kertas peperiksaan UPSR Tahun 2012, (Terima kasih:Lembaga Peperiksaan Malaysia)
மேற்கண்ட ஒரு படம் 2012ஆம் ஆண்டில் மலேசியத் தேர்வில் இடம்பெற்றவை ஆகும். இப்படமானது மாணவர்களிடையே எழுதும் ஆர்வத்தையும் அறியும் ஆர்வத்தையும் தூண்டும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். ஆக, சிறார்களை இலக்கியம் பக்கம் ஈர்க்க இதுபோன்ற உத்திகளே மிகப் பொருத்தமானவை ஆகும். விக்ரமாதித்யன் கதைகளைச் சொன்ன பாட்டி காலத்திலிருந்தே 'மர்மம்' என்கிற உத்தி நம் கதை மரபிற்கு மிக நெருக்கமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கதைக் கேட்கும் மாணவர்களை ஆர்வப்படுத்தவும், கதைக்குள் அவர்களின் புலன்கள் ஆழ்ந்து செல்லவும் 'மர்மம்' என்கிற உத்தி அத்தியாவசியமான பொறுப்பைக் கொண்டுள்ளது என்பதை நம் கதைச்சொல்லல் பண்பாட்டினை நுட்பமாக விசாரணை செய்தால் தெளிவாக விளங்கும்.

மேலேயுள்ள படத்தை உற்றாராய்வும் மாணவன் அப்படம் கொண்டிருக்கும் ஒரு மர்மத்தை முதலில் கண்டறிய வேண்டும். அதாவது அவ்வீட்டினுள் இருக்கும் அந்த நிழல் மனிதர்கள் யார் என்றும் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் 'கிராமம் தொடர்பான இரகசியம்' என்னவென்றும் ஒரு மாணவன் அறிந்து கொள்ள வேண்டும்.  அதனை அவன் கற்பனைவளத்தின் மூலமாக அறிந்து, பின்னர் அதனை எழுத்து வடிவத்தில் கதையாக்கிட வேண்டியுள்ளது. ஆக, அம்மாணவன் இப்படத்திற்கேற்ற சிறுகதை எழுதும்போது கையாள வேண்டியது மர்மம் என்கிற படைப்புத்தியாகும். அதுவே இச்சிறுகதையை சிறந்த படைப்பாற்றல் மிக்க படைப்பாக மாற்றும்.

'Keep the suspense' என்கிற ஒரு வழக்கம் ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு மர்மத்தைக் கதையோட்டத்தில் தக்க வைத்து அதனைக் கதையின் முடிவில் சொல்லும்போது ஏற்படும் வாசிப்புப் பரவசம் நம் அனுபவத்தைப் புரட்டிப் போடும் என்பார்கள். அதன் சுவை இலக்கியத்தின் மீது மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆகவேதான், 'ஹெர்ரி போட்டர்' மாணவர் சமூகத்தை மட்டுமல்லாது இளைஞர்களையும் கவர்ந்திழுத்தது.  ஆகவே, சிறுகதைக்கு மர்மம் அவசியமா என்று கேட்டால், அதுவும் ஒரு படைப்புத்தி என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல வேளைகளில் சிறுகதையில் கவரும்தன்மையை ஏற்படுத்த அவ்வுத்தியானது அவசியம் என்பதையும் விளங்கிக் கொள்ளுதல் சிறப்பு. தேர்வில் படத்தைக் கொண்டுத்தான் மாணவர்கள் அதனை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாகக் கடந்தாண்டு தேர்வில் வந்த ஒரு படத்தைக் கவனிக்கலாம்.

Sumber: Kertas Peperiksaan UPSR Tahun 2017: Terima kasih: Lembaga Peperiksaan Malaysia)

மேற்கண்ட படத்தில் இரண்டு விதமான பகுதிகள் உண்டு. ஒன்று கதையின் சிக்கலை உணர்த்தும் பகுதியாகும். அதாவது சிறுகதையின் முதன்மை கதைமாந்தரான அச்சிறுவன் நாளை புத்தகக் கட்டணத்தைக் கட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளான். அவன் அப்பா அதனை எப்படிச் சமாளிப்பது என்கிற தயக்கத்தில் ஆழ்ந்துள்ளார். இவை படத்தைப் பார்த்து நாம் அறிந்து கொள்ள முடிந்த பகுதியாகும். இதே படத்தில் இன்னொரு பகுதி உள்ளது. அவர்களுக்குப் பின்னால் ஒருவர் நிற்கிறார். அப்பகுதியைக் கண்டதும் நமக்குள் ஏற்படும் கேள்விகளை இப்படி வகைப்படுத்தலாம்:
  1. யார் அந்த நபர்
  2. அவருக்கும் இச்சிறுகதைக்குமான தொடர்பு என்ன
இங்கிருந்து சிறுகதையைத் திட்டமிடும் ஒருவர் அந்நபர் வரும் பகுதியைச் சிறுகதைக்கான படைப்பூக்கத்தை ஏற்படுத்தும் பகுதியாகக் கையாள வேண்டியுள்ளது. அதனை எழுத்தில் கொண்டு வர ஒரு மாணவன் மர்மம் என்கிற உத்தியை இணைத்துக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக: பதில் சொல்ல முடியாமல் மௌனத்தில் ஆழ்ந்திருந்த அப்பாவைக் கண்டதும் குமரனுக்குக் கவலை மேலும் அழுத்தியது. செய்வதறியாமல்  நாளை வகுப்பில் நடக்கப்போகும்  மௌன யுத்தத்தை நினைத்துக் கொண்டே குமரன் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது சட்டென ஒரு விலையுயர்ந்த மகிழுந்து அவன் வீட்டின் முன்னே வந்து நின்றது. மகிழுந்தில் இருந்து கழுத்துப்பட்டையும் கைப்பை ஒன்றையும் வைத்திருந்த ஒரு நபர் கீழே இறங்கினார்.
குமரன் அவரைக் கண்டதும் முதலில் பயந்தான். அவ்வுருவம் அவர்களின் முன்கதவை நெருங்கியதும் குமரனும் அப்பாவும் எழுந்து நின்றனர். அவர்களின் முகத்தில் ஆச்சரியம் நிரம்பியிருந்தது.

"இங்க யார் குமரன்?" என்று அந்நபர் கேட்டதும் குமரனுக்குப் பயம் சூழ்ந்து கொண்டது.

"இவன் தான் என் பையன். ஏன் ஏதாச்சம் செஞ்சிட்டானா?" என்று குமரனின் அப்பா பதறினார்.

"வாழ்த்துகள் குமரன். நான் 'கல்கி' வார இதழிலிருந்து வருகிறேன். நீ கடந்த மாதம் எழுதி அனுப்பிய சிறுகதை எங்கள் பத்திரிகையில் முதல் பரிசை வென்றுள்ளது. அதற்குரிய தொகை 300-ஐ உன்னிடம் சேர்ப்பிக்க வந்திருக்கிறேன்," என்று அவர் கூறியதும் குமரனின் அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.

(இப்படியாக, இச்சிறுகதையின் கடைசி பகுதியை மர்மமாகக் கொண்டு சென்று கதையில் இருக்கும் சிக்கலைத் தீர்க்கவும் முடியும். இதுவே சிறுகதையில் சுவார்ஷ்யத்தையும் உண்டாக்கும்).

குறிப்பு: மேற்கண்ட சிறுகதைக்கான முடிவைச் சிந்திக்கும்போது அந்நபரை ஒரு காப்புறுதி முகவராக மட்டுமே சித்தரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை, அவர் ஒரு காப்புறுதி முகவர் என்கிற தீர்க்கமான தகவல் படத்தில் இல்லாதபோது அவரை வேறு துறையைச் சார்ந்தவராகவும், ஏற்புடைய வகையில் இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம்).
ஆகவே, மாணவர்களே'மர்மம்' என்பது ஒரு சிறுகதையை அதன் வாசிப்பு ருசியுடன் வழங்க மிகப் பொருத்தமான ஒரு படைப்புத்தி என்பதை சிறந்த சான்றுகளுடன் கவனித்தோம். 

 ஆக்கம்: ஆசிரியர் திரு.கே.பாலமுருகன் 

No comments:

Post a Comment