மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday 12 September 2018

தமிழ்மொழிக் கருத்துணர்தல் அகவயக் கேள்விப் பிரிவில் விடைகளை முழு வாக்கியத்தில் எழுதுவது பற்றி விரிவான விளக்கம்.


இதுபோன்ற கேள்வியும் இதைப் பற்றிய விவாதங்களும் பரவலாகவே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் 2017ஆம் ஆண்டு வரை அகவயக் கேள்விகளுக்கான விடைகளைக் குறிப்பாக (i, ii, iii) ஆகிய வகையிலான விடைகளைச் சுருக்கமாக எழுதினால் போதும் என்கிற புரிதல் நிலவியிருந்தது. இவ்வாண்டு அதிலுள்ள மாற்றங்களைத் தேர்வு வாரியத்தின் 2017ஆம் ஆண்டுக்கான ஆய்வுரை (KUPASAN MUTU JAWAPAN) என்கிற ஆவணத்தின் வழியாகத் தெரிந்து கொண்டுள்ளோம். தமிழ்மொழிக் கருத்துணர்தல் அகவயக் கேள்விகள் பிரிவில் எழுதும் எல்லா விடைகளும் முழுமையான வாக்கியத்தில், கருத்துத் தெளிவுடன் இருத்தல் வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களையும் கற்றல் கற்பித்தலில் அதனைப் பின்பற்றுமாறும் தேர்வு வாரியும் பரிந்துரைத்துள்ளது.

ஆகவே, முன்பு வரை நேர சிக்கனம் காரணத்தை முன்னிட்டு சுருக்கமாக விடை எழுதினால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்த பலரும் இதனால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அதன் விளைவே இன்று பலத்தரப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

நாம் எத்தனை விதமான கருத்து வேறுபாடுகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமான ஆவணம் அல்லது அமைப்பு சொல்வதைக் கருத்தில் கொண்டு ஆய்வுச் செய்ய வேண்டியுள்ளது. தேர்வு வாரியம் வெளியாக்கிய KUPASAN MUTU JAWAPAN நமக்குக் கற்றல் கற்பித்தலை இலகுவாக்கவும் சரியான இலக்கை நோக்கி மாணவர்களை வழிகாட்டவும் வழங்கப்பட்டிருக்கும் ஒரு வழிகாட்டி ஆவணம் ஆகும். அதனைப் வாசித்து, ஆய்வுச் செய்து நம் மாணவர்களின் தரத்திற்கேற்ப இலாவகமாக பலத்தரப்பட்ட நிலையில் கொண்டு செல்வது நம் பொறுப்பாகும்.

அதுபோன்று அவ்வாய்வுரையை நீங்கள் கேட்ட கேள்வியுடன் ஒப்பீட்டு ஆய்வு செய்ததன் வழியாக இரண்டு முக்கியமான விடயங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளதை அறிகிறேன்.





மேற்கண்ட ஆவணத்தை உற்றாயும்போது மாணவர்கள் இரண்டு வகையில் விடைகளை முழு வாக்கியத்தில் எழுதியிருப்பதைக் காணலாம்.

கேள்வி: தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்காற்றலாம்?

விடை 1: பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழில் உரையாடலாம்.

(இவ்விடையில் கேள்வி மீண்டும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்; அல்லது கேள்வி மீண்டும் விடையில் வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்)

விடை 2: தமிழ்மொழிச் சார்ந்த போட்டிகளில் அதிகம் ஈடுபடலாம்.
(இவ்விடையில் கேள்வி மீண்டும் வலியுறுத்தப்படவில்லை என்றாலும் கருத்துத் தெளிவோடும் வாக்கியம் முழுமையாக அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்)

ஆகவே, ஒரு கேள்விக்கு விடையை எழுதும்போது அக்கேள்வியை மீண்டும் பயன்படுத்திக் கொண்டாலும் அல்லது கேள்வியை மறு உபயோகம் செய்யாமல் முழுமையான வாக்கியத்தில் எழுதினாலும் அதனை சிறந்த பதில் என்றே வரையறுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை மேலும் விரிவாக காணலாம்.

அட்டவணை 7.1

கேள்வி: தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்காற்றலாம்?

விடை
மதிப்பீடு
விடை 1: தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழில் உரையாடுவதன் மூலம் பங்காற்றலாம்.
Jawapan Cemerlang mengikut KMJ 2017
விடை 2: தமிழில் உரையாடுவதன் மூலம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாம்.
Jawapan Cemerlang mengikut KMJ 2017
விடை 3: தமிழ்மொழிச் சார்ந்த போட்டிகளில் அதிகம் ஈடுபடலாம்.
Jawapan Cemerlang mengikut KMJ 2017
விடை 4: தமிழ்மொழிப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல்
Jawapan Kurang Tepat

மேற்கண்ட அட்டவணையின்படி எது தவறான விடை என்பதை மேலும் விரிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விடை கேட்கப்பட்ட கேள்விக்குப் பொருத்தமில்லாமலும் முழு வாக்கியத்தில் இல்லாமலும் அமைந்தால் அது சிறந்த விடை’-ஆகக் கருதப்படமாட்டாது.

அட்டவணை 7.2

கேள்வி: பள்ளிகளில் நிலவும் மட்டம் போடும் பிரச்சனையை எவ்வாறு களையலாம்?

விடை
மதிப்பீடு
விடை 1: பள்ளிகளில் நிலவும் மட்டம் போடும் பிரச்சனையை இலவசப் போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம் களையலாம்.
Jawapan Cemerlang mengikut KMJ 2017
விடை 2: கற்றல் கற்பித்தலில் விளையாட்டு உத்திகளைச் சேர்ப்பதன் மூலம் மட்டம் போடும் பிரச்சனையைக் களையலாம்.
Jawapan Cemerlang mengikut KMJ 2017
விடை 3: பள்ளிக்கு மட்டம் போடாமல் வரும் மாணவர்களுக்கு வாரப் பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
Jawapan Cemerlang mengikut KMJ 2017
விடை 4: இலவசப் போக்குவரத்துச் சேவை
Jawapan Kurang Tepat

 அதோடுமட்டுமல்லாமல் மாணவர்கள் பதில் எழுதும்போது ஒரே விடை மீண்டும் எழுதப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் புள்ளிகள் பாதிக்கப்படும் என அதிகாரப்பூர்வ ஆய்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக:

அட்டவணை 7.3

கேள்வி: பள்ளிகளில் நிலவும் மட்டம் போடும் பிரச்சனையை எவ்வாறு களையலாம்?
விடை
மதிப்பீடு
விடை 1: மட்டம் போடும் மாணவர்களைப் பற்றி அவர்களின் பெற்றோரிடம் தெரியப்படுத்தலாம்.
Jawapan SAMA diulang dua kali.

விடை 2: மட்டம் போடும் மாணவர்களின் வீட்டிற்குப் புகார் கடிதம் அனுப்பலாம்.

தேர்வர் அல்லது ஆசிரியர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு மாணவர்களை வழிநடத்தலாம். நமக்குக் கிடக்கும் எவ்வித ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்து அதன் உட்தேவையை விளங்கிக் கொண்டு மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் கடப்பாடும் நமக்கு இருக்கிறது. ஆய்ந்து புரிதல் என்ற ஒன்றே மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு அதனை ஆய்வு செய்து போதிக்க உதவியாக இருக்கும். நன்றி.

ஆக்கம்: ஆசிரியர் கே.பாலமுருகன்
bkbala82@gmail.com

No comments:

Post a Comment