1
“சார் உங்கள யாரு ரோத்தானை எடுக்க சொன்னது? அதான் இப்பல்லாம் ஆ ஊ-ன்னா பெரிய பெரச்சன ஆவுதே? இப்ப உள்ள பேரண்ட்ஸ் என்னானு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?”
தலைமை ஆசிரியர் திரு.இராமையா கொஞ்சம் நடுங்கியே போயிருந்தார். அவர் அடுத்த வருடம் பதவி ஓய்வு பெறவிருக்கும் இக்காலக்கட்டத்தில் இப்படியொரு சோதனை வந்து சேர்ந்தது.
“தர்மலிங்கம் இங்க வாங்க…இப்ப அந்த ஆளு என்னத்தான் சொன்னாரு?”
“அவர் வழிக்கு வரமாட்டராரு சார். பலமுறை சொல்லியாச்சாம். இந்த வாத்தியாரு கேட்காமல் அடிச்சிருக்காரு. போலிஸ் ஸ்டேஷன் போவேன்னு நிக்குறாரு”
குமரகுரு இப்பள்ளிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை அவர் பல பள்ளிகள் மாற்றப்பட்டிருக்கிறார். எல்லாம் பள்ளிகளிலும் ரோத்தான்தான் அவர் பிரச்சனையே. ஒவ்வொரு வாரமும் அவரால் பள்ளியில் பல சர்ச்சைகள் உருவாகும். பள்ளி வாசல்வரை வந்து கத்திவிட்டுப் போகும் பெற்றோர்களும் உண்டு.
“ஏன் சார் நீங்க இப்படி இருக்கீங்க? இப்ப யாருக்குப் பிரச்சனை? மேலடத்துல என் தலைய உருட்டுவான், தெரியுமா?”
“சார் பரவால… என்னைத்தான் பள்ளிய மாத்துவாங்க. நான் பாத்துக்குறன். நீங்க என்னால கஸ்டப்பட வேண்டாம்”
“ஆங்ங்ங் சின்னாங்க சொல்லிட்டிங்களே! அதெல்லாம் அப்படி இல்ல சார். நீங்க அடிச்ச அடில அந்தப் பிள்ள கையெலும்புல அடிப்பட்டிருக்கு சார். போலிஸ் கேஸ் சார். எவ்வளவோ பட்டுட்டிங்க. ஏன் சார் புத்தி வர மாட்டுது?”
“இங்க பாருங்க சார். ரோத்தான் நானா கேட்டேன்? அடிக்கக்கூடாதுனா ரோத்தானே பள்ளில இருக்கக்கூடாது சார்!!! நம்ம பிள்ளைங்களா நினைச்சித்தானே அடிக்குறோம். அது சில சமயத்துல இப்படி ஏடாகுடமா பட்டுருது”
“குமரகுரு சார்…ரோத்தான் வச்சி மிரட்டலாம். இலேசா தட்டலாம். முட்டிக்குக் கீழ அடிக்கலாம். அதை வெச்சி குற்றவாளிய அடிக்கற மாதிரியா அடிக்கிறது?”
“சார் நான்லாம் கையெழுத்து நல்ல வரணும்னு வாத்தியார்கிட்ட முட்டில அடி வாங்கி வந்தவந்தான். இப்ப மட்டும் என்னாவாம்? ஆசிரியர்கள் அடிக்கவே கூடாதுனு அப்ப எப்படி சார் மாணவர்கள் நல்ல வழிக்கு வருவாங்க? அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிங்கக்கூட உதவமாட்டாங்க சார்”
குமரகுருவின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்திருந்தன. கொஞ்ச நேரத்தில் தர்மலிங்கம் மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்குள் பதற்றத்துடன் வந்தார்.
“சார் அந்தப் பிள்ளையோட அப்பா கத்திக்கிட்டே வர்றாரு… இப்ப எப்படி சார்?”
“குமரகுரு சார். நீங்க இங்கயே இருங்க. நான் பேசிப் பாக்கறேன்”
திரு.இராமையா அவருடைய கழுத்துப்பட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார். கீழே இறங்கியதும் கையில் ஒரு கட்டையுடன் மாணவியின் அப்பா கணேசன் வருவது தெரிந்தது.
“குணா! இங்க வாங்க. அந்த ஆளு கையில கட்டை இருக்கு. அதை முதலில் வாங்கிட்டு உள்ள அனுப்புங்க. இல்லைனா விடாதீங்க. ரொம்ப கத்தனா நான் போலிஸ்ல சொல்றென்”
திரு.இராமையாவிற்கு இது புதிதல்ல. 1960களிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பள்ளிக்கூடம் மதிக்கத்தக்க இடமாக இருந்த ஒரு காலத்தை நினைத்துப் பார்த்தார். சட்டென மனத்தின் ஓரத்தில் ஒரு வெட்டு.
“சார் அவரு கத்துறாரு. நீங்க வந்து பேசிப் பாருங்க”
குணா அழைத்ததும் தலைமை ஆசிரியர் பெரிய கதவை நோக்கிக் கொஞ்சம் தயக்கத்துடன் நடந்தார்.
“கணேசன் என்னா இது? ஏன் கட்டைலாம்? கொஞ்ச படிச்ச மாதிரி நடந்துக்குங்க, ப்ளிஸ்”
“சார் அவன் படிச்ச வாத்தியாரு மாதிரியா நடந்துக்குறான்? பிள்ளைய போட்டு அப்படி அடிச்சிருக்கான். முட்டி எலும்புல க்ரேக் விட்டுருச்சி தெரியுமா? இதுக்கா பிள்ளைய பெத்துப் பள்ளிக்கு அனுப்புறோம்?”
“புரியுது கணேசன். நானும் பிள்ளைங்கள பெத்தவந்தான். உங்க வேதனை புரியுது. நிதானமா பேசலாம் கணேசன். தெரியாம நடந்துருச்சி…இந்தத் தடவ மன்னிச்சிருங்க…”
“என்ன சார் மன்னிப்பு? ஒரு தடவயா ரெண்டு தடவயா? எத்தனமுறை சொல்லிருக்கென். நான் ஒரு மாதிரி இதோட நிப்பாட்டிக்கோனு…என்ன சார் இது? ஆடா மாடா? பெத்த பிள்ள சார்”
“சரிங்க கணேசன். அவரையே மன்னிப்பு கேட்க சொல்றேன். இனிமேல் ஏதும் நடக்காமல் நான் பாத்துக்குறன். இல்லாட்டி அவரை வேறு பள்ளிக்கு மாத்திடுறேன்”
“முடியாது சார். அவன் எங்கப் போனாலும் இப்படித்தான். இந்தக் கட்டைலெ அவன் கைய உடைச்சிட்டு நானும் மன்னிப்பு கேட்டுக்குறன். சரியா போய்டும். எப்படி சார் சொல்லுங்க?”
கணேசன் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். சுற்றும் முற்றும் பார்த்த திரு.இராமையா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். சட்டென குமரகுரு வெளியே வந்தார். நிலைமை மோசமடையும் எனத் தெரிந்து கொண்ட திரு.இராமையா குணாவிடம் செய்கை காட்டினார். பாதுகாவலர் குணா குமரகுருவைத் தடுக்க ஓடினார்.
“சார்! விடுங்க அவரெ உள்ள. அடிக்கட்டும். அவரோட பிள்ள போன மாசம்வரைக்கும் கையெழுத்து எப்படி இருந்துச்சி இப்ப எப்படி இருக்குனு புத்தகத்தை எடுத்து பார்க்கச் சொல்லுங்க. அப்புறம் தெரியும்! போன வருசம் வரைக்கும் கணக்குல 40 கூட எடுக்காது. இப்ப 60க்கு மேல எடுக்குது. அதுக்குத்தான் என்னை அடிக்கனும்னா அடிக்கட்டும்... பிள்ளைய பெத்துட்டா மட்டும் போதாது கணேசன்...”
திரு.இராமையா மௌனமானார்.
“அப்படின்னா மத்த வாத்தியாருங்க என்ன உன்னை மாதிரி மாட்டை அடிக்கற மாதிரி அடிச்சா சொல்லி தர்றாங்க? நீ மட்டும் என்னா புதுசா? அடிச்சிட்டு நியாயம் பேசாத”
“சார் கோபம் வந்துட்டா உங்களாலே உங்க நாக்க அடக்க முடியல. கண்ட மாதிரி பேசறீங்க. என் வகுப்புல 30 பேரு சார். 30 பிள்ளைங்க. ஒவ்வொரு பிள்ளைங்களயும் திருத்தம்னும்னா புத்திமதி சொல்லிக்கிட்டா இருக்க முடியும்? எவ்ள கோபம் வரும் நினைச்சிப் பாருங்க”
“உனக்கொரு பிள்ள இருந்து அது முட்டி உடைஞ்சிருந்தா தெரியும்டா” எனக் கத்திக்கொண்டே கணேசன் முன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடி வருவார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
2
குமரகுரு ஆசிரியர் வழக்கம் போல மாற்றலாகி வேறு பள்ளிக்குச் சென்று மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு மாணவன் அவரைத் தேடி பள்ளிக்கு வந்தான்.
“சார் இல்லயா?”
“ஏன்ப்பா உனக்கு என்ன? எதுக்கு வந்துருக்க?”
“சாரைப் பாத்துட்டுப் பேசிட்டுப் போலாம்னு வந்தென்…”
திரு.இராமையாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. புகார் இல்லாமல் குமரகுருவை ஒருவர் பார்க்க வந்தது இதுவே முதல்முறையாக இருக்கும்.
“என்ன விசயம் என்கிட்ட சொல்லுயா?”
“எனக்கு மேடை பேச்சு வரலைனு சார் எல்லாம் முன்னுக்கும் என்னப் பல தடவ போட்டு அடிச்சிருக்காரு. அறைஞ்சி கன்னமே வீங்கிப் போயிருக்கு சார். ஆனால், அடிச்சிட்டு மறுநாள் தனியா கூப்ட்டு தைரியமா பேச என்னலாம் செய்யணும்னு சொல்லியும் கொடுத்தாரு. போன மாசம் இடைநிலைப்பள்ளிப் பேச்சுப்போட்டியில் நான் முதல் பரிசு வாங்கிருக்கென். அதை அவருகிட்ட சொல்லணும்னுத்தான் வந்தென்…அதான் சார்”
திரு.இராமையாவிற்குத் தூக்கி வாறிப்போட்டது. வேகமாக 4ஆம் ஆண்டு வகுப்பறைக்கு விரைந்தார். அங்கே திரு.கணேசனின் மகளை வெளியே அழைத்தாள்.
“ஏன்மா உன்ன சார் எப்பவும் அடிச்சிட்டு என்ன செய்வாரு?”
“ஓய்வு மணிக்கு அவர் அறைக்கு கூட்டிட்டுப் போய் கையெழுத்து புக்குல பயிற்சிக் கொடுப்பாரு…புக்குலாம் புதுசா வாங்கிக் கொடுத்தாரு. அடிச்சதுக்கு எப்பவும் மன்னிப்புக் கேட்பாரு,” எனப் பயந்து கொண்டே கூறினாள்.
திரு.இராமையா அதிர்ச்சியில் அப்படியே சிலையானார். அன்று முழுவதும் பாதிக்கு மேல் பிய்ந்து இரப்பர் கட்டி வைத்திருந்த குமரகுரு பயன்படுத்திய ரோத்தானைப் பள்ளியெங்கும் தேடிக் கொண்டிருந்தார்.
- கே.பாலமுருகன்
குறிப்பு: தண்டிப்பது தவறல்ல. ஆனால், தண்டித்த பிறகு மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களின் பிழைகளை விளக்குவதை மறவாதீர்கள். அப்படிச் செய்தால் எந்தத் தண்டனையும் வன்மையானது கிடையாது. மிருகவதைக்கும் நியாயமான கண்டிப்பிற்கும் வித்தியாசங்கள் உண்டு.
Arumaiyaana kathai
ReplyDeleteஅருமை
ReplyDelete