மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday, 2 September 2015

‘வெற்றி நிச்சயம்’ யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தாள் இரண்டு ஒரு விளக்கம்


வ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதவிருக்கும் அன்பார்ந்த மாணவர்களே, சோதனைக்குச் சில நாட்களே இருக்கும் இந்த வேளையில் தமிழ்மொழித் தாள் இரண்டைக் குறித்து ஒரு பொதுவான விளக்கம் கொடுக்கவே இதனை எழுதுகிறேன். கடந்த நான்காண்டு காலமாக மலேசியாவில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தமிழ்மொழிக்குப் பயிற்சியளித்த அனுபவத்திலும் தமிழ்மொழிக்கான திறமிகு ஆசிரியர் என்கிற கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட பதவியின் அடிப்படையிலும் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழிக்கான எனது தேடல் விரிவானதாகும். அப்படிப்பட்ட அனுபவத்தின் மூலம் உங்களுக்கு இப்பொழுது வழிகாட்டுகிறேன்.

தமிழ்மொழித் தாள் இரண்டு மூன்று பிரிவிகளால் ஆனதாகும். முதல் பகுதியான வாக்கியம் அமைத்தல் பிரிவைக் கவனிப்போம்.

வாக்கியம் அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

Ø  - ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனி வாக்கியம் மட்டுமே அமைத்தல் வேண்டும்.
Ø  - சொல்லை விளக்கக் குறைந்தது ஒரு குறிப்புச்சொல் வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்புச்சொல் உள்ள வாக்கியத்திற்கே முழுப்புள்ளி வழங்கப்படும்.
Ø  - சொல்லின் பொருள் மாறாதபடி, அதனுடன் உருபுகளோ அடைகளோ விகுதிகளோ சேர்த்துக் கொள்ளலாம்.
Ø  - கொடுக்கப்பட்ட சொல்லோடு வேறோரு சொல்லை இணைத்து, புதியதொரு சொற்றொடருக்கு வாக்கியம் அமைத்தல் கூடாது.

மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் உங்களின் யூ.பி.எஸ்.ஆர் தாள் இரண்டில் காணலாம். அதற்கேற்பவே நீங்கள் வாக்கியங்கள் அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:
நடுஅப்பா தோட்டத்தில் குழியை வெட்டி செடியை நட்டார்.

மேற்கண்ட வாக்கியத்தைக் கவனிக்கவும். நடு எனும் வழங்கப்பட்ட சொல் நட்டார் என மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றுவது சரியா? மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறையின்படி கொடுக்கப்பட்ட சொல்லில் விகுதியைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பது ஏற்கத்தக்கதே. ஆகவே, நடு எனும் சொல்லை நட்டார், நட்டாள், நட்டான், நட்டனர், நட்ட, நட்டு என மாற்றிக்கொள்ளலாம். அடுத்து இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்:

படி குமரன் மாடிக்குச் செல்லப் படியில் ஏறினான்.

மேற்கண்ட வாக்கியத்தில் கொடுக்கப்பட்டபடிஎன்ற சொல், ‘படியில்என மாற்றப்பட்டுள்ளது சரியா? மேலே கொடுக்கப்பட்ட விதிமுறையின்படி கொடுக்கப்பட்ட சொல்லில் வேற்றுமை உருபைச் சேர்த்துக்கொண்டால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே, மறவாமல் கொடுக்கப்பட்ட சொல்லிற்கு வாக்கியத்தில் கோடிடவும்.
இன்னொரு வாக்கியத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:

அழகுஉலக அழகி அணிந்திருந்த ஆபரணங்கள் அழகாகக் காட்சியளித்தன.

மேற்கண்ட வாக்கியத்தில்அழகுஎனும் சொல் அழகாக என மாற்றப்பட்டிருப்பது சரியா? விதிமுறையின்படி கொடுக்கப்பட்ட சொல்லுடன் அடைகளைச் சேர்த்துக் கொள்ளுதல் முடியும். ஆன என்கிற பெயரடையையும் ஆக என்கிற வினையடையும் சேர்த்து வாக்கியம் அமைத்தல் முடியும். மாணவர்களே தயவு செய்து வாக்கியத்தில் இலக்கணப்பிழைகள்/ எழுத்துப்பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். முழுப்புள்ளிகள் பெற வேண்டுமென்றால் அவ்விரண்டு பிழைகளையும் தவிர்த்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக:

இலக்கணப்பிழைகள்:

அது அம்மா வைத்தக் கறி எனும் வாக்கியத்தில் வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருப்பின் அஃது வரும் எனும் இலக்கண மரபைப் பின்பற்றவில்லை. ஆக, இவ்வாக்கியம் பிழையாகக் கருதப்படும்.

எழுத்துப்பிழைகள்:

குமரன் புத்தகத்திலுள்ள கதைகளை படித்தான் எனும் வாக்கியத்தில் கதைகளை எனும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை உருபானக்குப் பிறகு ,,, வந்தால் வலிமிகும் எனும் எழுத்திலக்கணத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, மாணவர்களே வாக்கியம் அமைத்த பிறகு ஒருமுறை இலக்கணப்பிழைகளும் எழுத்துப்பிழைகளும் இல்லாமல் சரிப்பார்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, பிரிவில் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைக் கொண்டு ஒரு சிறுகதை எழுத வேண்டும். யூ.பி.எஸ்.ஆர் தாள் இரண்டில் கொடுக்கப்படும் கட்டளையைப் பார்ப்போம்.


பிரிவு : வழிகாட்டிக் கட்டுரை
(20 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிப்படத்திற்கு ஏற்ப 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு சிறுகதை எழுதுக.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையைக் கருத்தூன்றி வாசித்தால் கொடுக்கப்பட்டிருக்கும் படம்(தனிப்படம்/ தொடர்ப்படம்) ஒரு சூழலை/ சம்பவத்தை மையமாகக் கொண்டு வரும் எனப் புரிந்து கொள்ள முடியும். அதனை நன்குணர்ந்து மாணவர்கள் சுவாரிஷ்யமான ஒரு சிறுகதையைச் சுவைப்பட எழுதிட வேண்டும். இப்பகுதியில் மாணவர்கள் எழுதுவது கட்டுரையல்ல ஆகவே கட்டுரை நடையில் இருத்தல் கூடாது. செய்யுள் மொழியணிகளை மாணவர்கள் கதையில் தனித்து விளக்கமளித்தல் கட்டுரைக்கான ஒரு நடையை உருவாக்கிவிடும். ஆகவே, மாணவர்கள் செய்யுள் மொழியணிகளைக் கதையில் இடம்பெறும் வசனங்களில் கதாபாத்திரங்கள் உச்சரிப்பதைப் போன்று எழுதினால் கதைக்கு இயல்பானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக:

டேய்ய்ய் முகிலா! முன் வைத்த காலைப் பின் வைக்கக்கூடாதுனு உனக்குத் தெரியாதாடா என்கிற வசனத்தில் செய்யுளும் மொழியணியும் கதைக்குள் இடையூறாக வராமல் இயல்பாக வந்து நிலைக்கின்றது.

மேலும், சிறுகதையில் வர்ணனைகளை மாணவர்கள் சேர்த்து எழுதினால் சிறப்பாக இருக்கும். கால வரணனை, கதைக்கள வர்ணனை போன்றவற்றை மாணவர்கள் கையாளலாம். 80 சொற்களுக்குக் குறையாமல் அதே சமயம் கொடுக்கப்பட்ட நேரத்தைக் கவனத்தில் கொண்டு கதை நீளமாக இழுத்துக் கொண்டு போகாமலும் கவனித்துக் கொள்ளவும். கதையில் முதன்மை கதைப்பாத்திரத்திற்குப் பெயர்கள் வழங்கப்பட்டிருந்தால் அதனையே பயன்படுத்தவும். பெயரை மாற்றுவது தவறாகும். கதை முடிவு வித்தியாசமானதாக இருக்கும்படி எழுதவும். ஓர் எதிர்ப்பாராத முடிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும் மாணவர்கள் கதையில் வரும் வசனங்களைத் தனிப்பத்தியில் எழுதிட வேண்டும். இரண்டு வசனங்களை ஒரே பத்தியில் எழுதுவதன் மூலம் குழப்பங்கள் ஏற்படலாம். தமிழ்மொழித் தாள் ஒன்றில் வரும் படைப்பிலக்கியப் பகுதிகளில் இருக்கும் சிறுகதைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வாசிக்கவும்.

டுத்து, திறந்தமுடிவுக் கட்டுரைக்கான பிரிவைப் பார்க்கலாம். இதில் மொத்தம் மூன்று தலைப்புகள் வரும். மாணவர்கள் ஏதேனும் ஒன்றனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுத வேண்டும். யூ.பி.எஸ்.ஆர் தாளில் இடம்பெறும் கட்டளை பின்வருமாறு:


பிரிவு : திறந்தமுடிவுக் கட்டுரை
(30 புள்ளிகள்)

கீழ்காணும் 1,2 3 ஆகிய தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 120 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட கட்டளையின்படி மாணவர்கள் 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரையை எழுதிட வேண்டு என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். திறந்தமுடிவுக் கட்டுரையில் மாணவர்கள் முன்னுரையிலும் கருத்திலும் முடிவுரையிலும் செய்யுளும் மொழியணிகளையும் பயன்படுத்துவது இன்றியமையாத சிறப்பைச் சேர்த்திடும்.

திறந்தமுடிவுக் கட்டுரையில் இடம்பெறும் மூன்று தலைப்புகளைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். அதில் அமைப்புக் கட்டுரைக்கான பகுதியில் அதிகார்வப்பூர்வக் கடிதம், அதிகார்வப்பூர்வமற்ற கடிதம், உரை, அறிக்கை போன்றவை இடம்பெறும். மூன்றாவது தேர்வில் தன் வரலாறு, கற்பனைக் கட்டுரை இடம்பெறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

முதல் தலைப்பில் ஒரு சொல் கட்டுரை, பழமொழிக் கட்டுரை, கருத்துவிளக்கக் கட்டுரை போன்றவை இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக: நீரின் பயன், பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதால் ஏற்படும் விளைவுகள், ஆழம் அறியாமல் காலை விடாதே, சேமிப்பின் அவசியம், தந்தை, என வகைப்படுத்தலாம். ஒரு சொல் கட்டுரை என்பது தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தை வைத்துக் கட்டுரையை எழுதக்கூடாது. மாணவர்கள் அத்தலைப்பைப் பொதுவான ஒரு நிலையில் வைத்துக் கருத்துகளை எழுத வேண்டும்.

கற்பனைக் கட்டுரை இந்த நூற்றாண்டு மாணவர்களின் புத்தாக்கத் திறன், ஆக்கத் திறனை வளர்க்கும்படியான கட்டுரை பகுதியாகும். மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பை மையமாகக் கொண்டு கற்பனையை உயர்நிலை சிந்தனையுடன் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக:

நான் விந்தை மனிதனானால் எனும் தலைப்பில் மாணவர்கள் நான் மரமாவேன், நாற்காலியாவேன் என எழுதினால் அக்கருத்து தவறானதாகவும் தலைப்புக்கு ஒவ்வாத ஒன்றாகவும் கருதப்படும். ஒரு மனிதன் சாதாரண மனிதனாக இல்லாமல் விந்தை மனிதனாக மாறுவதைப் போன்று கற்பனை செய்து எதிர்காலத்தில் அக்கற்பனைகளை எழுத வேண்டும். உதாரணமாக, குதிரை மனிதனாக மாறுவது, மரம் போன்ற மனிதனாக மாறுவது என விளக்கலாம்


ஆகவே, மாணவர்களே இவ்விளக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். எனது மற்றுமொரு இறுதி கட்டுரையில் தாள் ஒன்றிற்கான சில உத்திகளையும் விளக்கங்களையும் தருகிறேன். சுடர் விடுவோம் வெற்றி நிச்சயம். அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் கே.பாலமுருகன் 0164806241. நன்றி. வெற்றி நிச்சயம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்

No comments:

Post a Comment